மகாராஷ்டிராவில் கரோனா எதிரொலி: பள்ளி பாடத்திட்டம் 25 சதவீதம் குறைப்பு
கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, மகாராஷ்டிராவில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இது மாணவர்களின் கல்வியை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இணையதளவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருந்தபோதிலும், போதிய வசதி இல்லாததால் அனைத்து தரப்பு மாணவர்களாலும் இந்த வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. எனவே, மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில் பெரும்பாலான மாநிலங்கள் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை குறைத்து வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிாரவில் 1 முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையிலான பாடத்திட்டங்கள் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் நேற்று அறிவித்தார்.
