Last Updated : 27 Jul, 2020 08:02 AM

 

Published : 27 Jul 2020 08:02 AM
Last Updated : 27 Jul 2020 08:02 AM

ராஜஸ்தானில் அடுத்த திருப்பம்: அசோக் கெலாட் அரசுக்கு எதிராக வாக்களிக்க எம்எல்ஏக்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி கொறடா உத்தரவு

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த 6 எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் கொறடா திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் 107 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை அனுபவித்து வந்த அசோக் கெலாட் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 101 எம்எல்ஏக்கள் தேவை . 6 எம்எல்ஏக்களும் எதிராக வாக்களித்தால் பெரும்பான்மையான 101 எண்ணிக்கையை முதல்வர் கெலாட் பெறுவார் என்றாலும், சபாநாயகர் வாக்கையும் சேர்க்க வேண்டும். மேலும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவில் நம்பிக்கை வாக்கெடுப்பை கெலாட் எதிர்கொள்கிறார். அவர்களில் யாரேனும் ஒருவர் விலைபோனாலும் ஆட்சியைத் தக்கவைப்பதில் சிக்கல் உண்டாகும்

நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்தால், அந்த 6 எல்எல்ஏக்கள் மீதும் அந்தக் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்பதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸில் சேர்ந்ததை ரத்து செய்யக் கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ சார்பில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் சந்தீப் யாதவ், வாஜிப் அலி, தீப்சந்த் கேரியா, லகான் மீனா, ஜோகிந்திரா அவானா, ராஜேந்திர குதா ஆகியோர் வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் ஆயினர்.

அதன்பின் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி தங்களை காங்கிரஸில் இணைத்துக்கொண்டனர். இவர்கள் காங்கிரஸில் சேர்ந்த இரு நாட்களுக்குப்பின், 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் எம்எல்ஏக்களாகவே கருதப்படுவார்கள் எனப் பேரவைத் தலைவர் அறிவித்தார். இதனால் காங்கிரஸின் பலம் பேரவையில் 107 ஆக அதிகரித்தது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் சச்சின் பைலட் மீது குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளாததால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவரையும், ஆதரவு எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநில சட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.

இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் தொடர்ந்த வழக்கில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் பெரும்பான்மையில்லாத அரசு என்று அசோக் கெலாட் அரசை பாஜக விமர்சித்து வருகிறது. இதையடுத்து, சட்டப்பேரவையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த முதல்வர் அசோக் கெலாட், ஆளுநரிடம் பேரவையைக் கூட்ட அரசு சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை நேற்று மாலையில் சென்று முதல்வர் அசோக் கெலாட் சந்தித்துப் பேசியும் அவர் பேரவையைக் கூட்டுவதற்கு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
அதன்பின் 2-வது முறையாக முதல்வர் அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்குக் கடிதம் எழுதி வரும் 31-ம் தேதி பேரவையைக் கூட்ட வேண்டும், அதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளரும் கொறடாவுமான சந்திர மிஸ்ரா

இந்தச் சூழலில் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளரும் கொறடாவுமான சந்திர மிஸ்ரா நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து சென்று காங்கிரஸில் சேர்ந்த 6 எம்எல்ஏக்களுக்கும் தனித்தனியாக கொறடா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி என்பது தேசியக் கட்சி. அரசியலமைப்புச் சட்டம் 10-வது பட்டியலில், 4-வது பத்தியின்படி, எந்த மாநிலக் கட்சியுடனும் தேசியக் கட்சியை இணைக்க முடியாது. ஆதலால், 6 எம்எல்ஏக்களும் இன்னும் பகுஜன் சமாஜ் கட்சிஎம்எல்ஏக்கள்தான்.

ஆதலால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக 6 எம்எல்ஏக்களும் வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். இதுகொறடாவின் உத்தரவு.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் தங்களையும் ஒரு வாதியாக இணைக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி மனுத்தாக்கல் செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x