2006 மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் குற்றவாளிகள், ஒருவர் விடுவிப்பு: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

2006 மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் குற்றவாளிகள், ஒருவர் விடுவிப்பு: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
2 min read

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் புறநகர் ரயில்களில் குண்டு வெடித்த வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதி மன்றம் 9 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பளித்தது. இதில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்புக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒய்.டி.ஷிண்டே இந்த தீர்ப்பை அளித்துள்ளார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கமல் அகமது அன்சாரி (37), தன்வீர் அகமது அன்சாரி (37), முகமது பைசல் ஷேக் (36), எஹ்தே ஷாம் சித்திகி (30), முகமது மஜித் ஷபி (32), ஷேக் ஆலம் ஷேக் (41), முகமது சாஜித் அன்சாரி (34), முஸம்மில் ஷேக் (27), சொஹைல் மெஹ்மூத் ஷேக் (43), ஜமீர் அகமது ஷேக் (36), நவீத் ஹுசைன் கான் (30), ஆசிப் கான் (38) ஆகிய 12 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ள ஆசம் சிமா மற்றும் 11 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் அனைவருமே தடை செய்யப்பட்ட சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள்.

குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டவர்களுக்கு தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

ஆர்டிஎக்ஸ் குண்டுகள்

மும்பையை அதிரவைத்த இந்த பயங்கர சம்பவம் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. மும்பை புறநகர் ரயில்களில் முதல் வகுப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ஆர்டிஎக்ஸ் ரக குண்டுகள் வெடித்ததில் 188 பேர் உயிரிழந்தனர். 829 பேர் காயம் அடைந்தனர்.

மாதுங்கா ரோடு, மாஹிம், பாந்த்ரா, கர் ரோடு, ஜோகேஷ்வரி, போரிவிலி, மீரா ரோடு ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நேரத்தில் மாலை 6.23 மணிக்கு தொடங்கி 10 நிமிட இடைவெளியில் 7 ரயில்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இந்த வழக்கு விசாரணை மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

விசாரணைக்கு தடை

8 ஆண்டு காலம் நீடித்த விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ல் முடிவுக்கு வந்தது வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் 2008-ல் தடை விதித்தது. 2010-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி உச்ச நீதிமன்றம் தடையை விலக்கியது. அதன் பிறகு சாட்சிகள் விசாரணை தொடங்கப்பட்டது.

2006-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி மற்றும், அக்டோபர் 3-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 13 பேரை தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களில் 11 பேர் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பு உள்ளதாக முதலில் தெரிவித்து பின்னர் மறுத்தனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், கைதான 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

192 சாட்சிகள்

8 ஆண்டு நீடித்த விசாரணையில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள், 5 ஐஏஎஸ் அதிகாரிகள், 18 டாக்டர்கள் உட்பட 192 சாட்சிகளிடம் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் 51 சாட்சிகளிடம் குறுக்குவிசாரணை நடத்தினார். சாட்சிகள் கொடுத்த வாக்குமூலம் சுமார் 5,500 பக்கங்கள் இருந்தது. தீவிர விசாரணைக்குப் பிறகு 12 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அப்துல் வாஹித் சாஹிப் என்பவர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in