

உத்தரப் பிரதேசக் காவல்துறையின் உயர் அதிகாரிகளைக் குறைந்த பதவிகளில் அமர்த்தியுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத். கான்பூர் மற்றும் அயோத்யா மாவட்டங்களின் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர்களாக (எஸ்எஸ்பி) டிஐஜி அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் சமீப நாட்களாக குற்றங்கள் பெருகத் தொடங்கியதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கான்பூரின் பிக்ரு கிராமத்தில் ரவுடி விகாஸ் துபேயால் காவல்துறையினர் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அடுத்து விகாஸ் துபே மற்றும் அவரது 5 சகாக்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதே கான்பூரில் உடன் பணியாற்றுபவர்களால் இளைஞர் சஞ்சீத் யாதவ் பிணையத் தொகைக்காகக் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி, கான்பூரில் ஐபிஎஸ் உள்ளிட்ட 11 காவல்துறை அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்திருந்தார். காஜியாபாத்தில் தங்கள் மீது பாலியல் புகார் அளித்த பத்திரிகையாளரை 10 இளைஞர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் 5 குற்றவாளிகளும் கைதாகி உள்ளனர். இதுபோல் அடுத்தடுத்து நடைபெற்ற குற்றச்செயல்களால் உத்தரப் பிரதேச அரசு, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
எனினும், கோண்டாவில் ரூ.4 கோடி பிணையத்தொகை கேட்டுக் கடத்தப்பட்ட 8 வயதுச் சிறுவனை மட்டும் 24 மணிநேரத்தில் உத்தரப் பிரதேச காவல்துறையின் அதிரடிப் படை மீட்டது. இதில், குழந்தையின் சித்தப்பா உள்ளிட்ட 5 குற்றவாளிகள் இன்று கைதாகினர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி, தம் காவல்துறையில் கான்பூர் மற்றும் அயோத்யா மாவட்டங்களில் பெரிய மாற்றம் செய்துள்ளார். இதில் எஸ்.எஸ்.பி.க்களாக அதைவிட உயர் பதவி வகிக்கும் டிஐஜி அந்தஸ்திலான காவல்துறை அதிகாரிகளை நியமித்துள்ளார்.
குறிப்பாகக் கான்பூரில் எஸ்.எஸ்.பி.யாக இருந்த தமிழரான பி.தினேஷ்குமார் ஐபிஎஸ், ஜான்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். சஹரான்பூரில் இருந்து வந்த தினேஷ்குமார், கான்பூரின் எஸ்.எஸ்.பி.யாக மொத்தம் 38 நாட்கள் மட்டுமே பணியாற்றி உள்ளார்.
தற்போது தினேஷ்குமார் வகித்த இடத்தில் அலிகரில் டிஐஜியாக இருந்த பிரிதிந்தர்சிங் எஸ்.எஸ்.பி.யாக அமர்த்தப்பட்டுள்ளார். இதற்கு முன் பகுஜன் சமாஜ் ஆட்சியில் மாயாவதி, உத்தரப் பிரதேசத்தில் முதல்வராக இருந்தபோது இதுபோன்ற டிஐஜியாக உயர் பதவியில் இருப்பவர்கள் எஸ்.எஸ்.பி.க்களாக அமர்த்தப்பட்டிருந்தனர்.
இதனால், இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.எஸ்.பி.க்களாகும் வாய்ப்பு கிடைப்பதில்லை எனப் புகார் எழுந்தது. அதன் பிறகு முதல்வராக வந்த சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ், அம்முறையை அகற்றினார்.
தற்போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி மீண்டும் அந்த முறையைக் கொண்டு வந்துள்ளார். இவர் ஏற்கெனவே தனது ஆட்சியில் ஐ.ஜி.க்களின் பதவிகளில் அதைவிட உயர்ந்த பதவி வகிக்கும் ஏ.டி.ஜி.க்களை அமர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.