

முன்னாள் அலிபாபா நிறுவன ஊழியர் ஒருவர் தொடுத்த வழக்கை முன்வைத்து அலிபாபா இணை-நிறுவனரும் தலைவருமானஜேக் மா-வுக்கு குருகிராம் மாவட்ட நீதிமன்றம் ஒன்று சம்மன் அனுப்பியுள்ளது.
மனுதாதர் தன்னை தவறாக நிறுவனம் பணிநீக்கம் செய்தது என்றும் காரணம் நிறுவன செயலிகளில் சென்சார் பற்றியும் போலிச் செய்திகள் பற்றியும் அவர் புகார் எழுப்பியதால் தன்னை பணி நீக்கம் செய்ததாகவும் அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அலிபாபாவின் யுசி நியூஸ், யுசி பிரவுசர், மற்றும் சீனாவின் 57 பிற செயலிகளை இந்திய அரசு முடக்கி உத்தரவிட்டது. தடையை அடுத்து நிறுவனங்களிடமிருந்து எழுத்துப் பூர்வ பதிலை மத்திய அரசு கேட்டிருந்தது. அதாவது உள்ளடக்கத்தை சென்சார் செய்தார்களா அல்லது அன்னிய நாட்டுக்காக வேலை செய்தார்களா என்ற விளக்கத்தை மத்திய அரசு கோரியிருந்தது.
இந்நிலையில் ஜூலை 20ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அலிபாபாவின் யுசி வெப் முன்னாள் ஊழியர் புஷ்பேந்திர சிங் பார்மர், சீனாவுக்கு எதிரான செய்திகளை சென்சார் செய்கின்றனர் என்றும், யுசி பிரவுசர், யுசி நியூஸ் போலிச்செய்திகளை மக்களுக்கு அளிக்கிறது என்றும் இதன் மூலம் சமூக, அரசியல் குழப்பங்களை உருவாக்கப்பார்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
புஷ்பேந்திரா 2017 அக்டோபர் வரை யுசி வெப் அலுவலகத்தில் குருகிராமில் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றினார்.
தனது புகாருக்கு ஆதரவாக அவர் யுசி நியூஸ் செயலியில் காட்டப்பட்ட சில செய்திகளை சேர்த்திருந்தார். இதில் 2017-ல் ஒரு இந்தி மொழி செய்தியில், ‘2000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு முதல் தடை செய்யப்படுகிறது’ என்ற போலி செய்தியும் அடங்கும். இன்னொரு 2018-ம் ஆண்டு செய்தித் தலைப்பில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்டது என்ற போலிச் செய்தி காணப்பட்டது.
செயலிகள் தடை செய்யப்படும் வரை இந்தியாவில் யுசி பிரவுசர் 689 மில்லியன் முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. யுசி நியூஸ் 79.8 மில்லியன் டவுன்லோடுகள். பெரும்பாலும் 2017-18- காலங்களில் டவுன்லோடு செய்யப்பட்டன.
இந்நிலையில் குருகிராம் நீதிமன்றம் அலிபாபா தலைவர் ஜேக் மாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
(ஏஜென்சி தகவல்கள்)