

டெல்லியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் வெற்றி பெற்றுள்ளதாக அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக டெல்லி புராரி பகுதியில் அமைக்கப்பட்ட மருத்துவமனையை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் காணொலிக் காட்சி முறையில் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்துக்கு அடுத்தபடியாக டெல்லியில்தான் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசும், டெல்லி அரசும் இணைந்து பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் விளைவாக, டெல்லியில் தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. அதேசமயத்தில், குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி அடைந்திருக்கிறோம். ஆனால், நமது இந்தப் போராட்டம் இத்துடன் முடிவடைந்துவிட்டது எனக் கூறிவிட முடியாது. வைரஸை முழுமையாக வெற்றி கொள்ள இன்னும் சில மாதங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.