

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் தனக்கு 102 எம்எல்ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரி ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் நேற்றுமுன்தினம் அசோக் கெலாட் பட்டியல் அளித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றால் அடுத்த 6 மாதங்களுக்கு அரசுக்கு ஆபத்தில்லை என்று நினைக்கிறார். மேலிட நெருக்குதல் காரணமாக சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் தாமதம் செய்வதாக குற்றம்சாட்டிய அவர், தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் ஆளுநர் மாளிகையில் 4 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதற்கு பதில் அளித்த ஆளுநர், ‘‘சட்டப்பேரவையை கூட்ட வேண்டாம் என்று யாரும் நெருக்குதல் அளிக்கவில்லை’’ என்று தெரிவித்தார். மேலும், “சட்டப்பேரவையை கூட்ட 21 நாள் நோட்டீஸ் தேவைப்படுகிறது. இதுதொடர்பான அமைச்சரவை குறிப்பில் எந்த தேதியில் பேரவை கூட்டப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. அமைச்சரவை குறிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை” என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
இதையடுத்து நேற்று மாலை மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது, புதிய அமைச்சரவை குறிப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற புதிய பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டம் அவர்கள் தங்கியுள்ள சொகுசு ஓட்டலில் நேற்று மதியம் நடைபெற்றது.