

மகாராஷ்டிர மாநில தேர்தல் அலுவலகம் தன் சமூக வலைதளப் பணிக்காக பாஜகவுடன் நேரடி தொடர்புடைய விளம்பர நிறுவனம் ஒன்றை நியமித்தது புதிய சர்ச்சையைக் கிளப்ப, மகாராஷ்டிர தேர்தல் அதிகாரி மீது தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
2019 தேர்தல் தொடர்பான பணிக்காக பாஜக இளைஞர் பிரிவில் தீவிரமாக இயங்கி வரும் தேவங் தவே என்பவரை மகாராஷ்டிர தேர்தல் அதிகாரி நியமித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஆர்வலரும் முன்னாள் பத்திரிகையாளருமான சாகெட் கோகலே என்பவர் தன் சமூக வலைதளத்தில் அம்பலப்படுத்த இது சர்ச்சையைக் கிளப்பியது.
மகாராஷ்டிர மாநில தேர்தல் அலுவலகம் நியமித்த நிறுவனத்தின் பெயர் சைன்போஸ்ட் இந்தியா, இது பாஜக இளையோர் பிரிவின் ஐடி மற்றும் சமூக வலைதள தேசிய ஒருங்கிணைப்பாளரான தேவங் தவே என்பவருடையது என்பதுதான் கோகலேயின் புகார்.
கோகலேயின் இந்த பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்டிர தேர்தல் அதிகாரியின் இந்தத் தேர்வு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷெய்பாலி ஷரண் தன் ட்விட்டரில், “கோகலே என்பாரின் ட்விட்டர் தகவலின் அடிப்படையில் மகாராஷ்டிர தலைமை தேர்தல் அதிகாரி இது தொடர்பாக விளக்கமான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
தவேயின் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட பணி தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு குறித்த தகவல் பரப்புரைக்காக மட்டுமே என்று தேர்தல் அதிகாரி கூறுகிறார்.
2019 தேர்தலின் போது ஆளும்கட்சியாக பாஜக இருக்கும் சமயத்தில் அதனைச் சேர்ந்த ஐடி பிரிவு நிறுவனத்தை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தலாமா என்று மகாராஷ்டிர தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, பணி அரசியல் சம்பந்தமற்றது என்பதால் கொடுத்தோம் என்றார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி 2019 தேர்தல் குறித்த சுயேச்சையான விசாரணை தேவை என்று கூறியதோடு மாநில தேர்தல் ஆணையம் எப்படி ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் பணியை ஒப்படைக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தேர்தல் ஆணையத்தின் தனித்துவத்தின் மீதும் கேள்வியை எழுப்புவதாக காங்கிரஸ் புகார் எழுப்பியுள்ளது.