

சீனாவுடனான உறவு மோசமடைந்து வரும் நிலையில், புதிதாக வர்த்தக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இந்திய எல்லையில் அமைந்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் எதுவும் இனி இந்திய அரசு சார்ந்த பணிகளை ஏற்று செயல்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவைப் பணிகளை அவை மேற்கொள்வதாய் இருந்தால் தொழில்துறை அமைச்சகத்தில் அவை பதிவு செய்திருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவுக்கு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள், அவை எந்த நாட்டைச் சேர்ந்தவை என்ற விவரத்தை டெண்டர் கேட்பு மனுவில் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
சீனாவைச் சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளின் ஒரு நடவடிக்கையாக இது இருக்கலாம் என தெரிகிறது. 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய துறைமுகங்களுக்கு வந்திறங்கிய சீன பொருட்களை இறக்குமதி செய்வது தாமதப்படுத்தப்பட்டது.
சீன தயாரிப்புகளை இந்தியா சார்ந்திருக்காது என்பதை இத்தகைய நடவடிக்கைகள் அந்நாட்டுக்கு உணர்த்தும் என்று லண்டன்கிங் கல்லூரியில் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆராயும் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் எல்லையில் சுமுக தீர்வை சீனா எட்டுவதற்கு உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எல்லை பிரச்சினை குறித்துஇரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக பேச்சுவார்த்தை நடைபெறும் சமயத்தில் மத்திய அரசு இத்தகைய முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள தனது படையை சீனா முற்றிலுமாக திரும்பப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த நடவடிக்கை குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சீனாவில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில் சில பொருட்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய டிசம்பர் 31-ம் தேதிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்படும் டெண்டர் கேட்பு மனுக்கள் அனைத்துக்கும் புதிய விதிமுறை பொருந்தும். ஒருவேளை டெண்டர் பரிசீலனை ஆரம்ப கட்டத்தில் இருப்பின், பதிவு செய்யப்படாத நிறுவனங்களை தேர்வு செய்யக் கூடாது.