

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிருபிக்க விரும்புகிறார், ஆனால் பாஜக தடுக்க நினைக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக்கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே, அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநிலசட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.
இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்தது. சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும், ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்கவும் அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவால் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் மீது சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கூறியதாவது:
ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். வரும் திங்கள் முதல் அவை நடவடிக்கைகள் தொடங்க வேண்டும். கரோனா வைரஸ் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே அவையை கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலமும் வேண்டிக் கொண்டேன்.
நேற்று இரவே ராஜ் பவனில் இருந்து உத்தரவு வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. யாருடைய நெருக்கடியால் ஆளுநர் தாமதப்படுத்துகிறார் எனத் தெரியவில்லை. இதனை எதிர்த்து ராஜ்பவனை முற்றுகையிட்ட மக்கள் நாளை போராட்டம் நடத்துவார்கள்’’ எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் அசோக் கெலோட் இன்று பிற்பகல் ராஜ்பவனுக்கு சென்றார். ராஜ்பவனுக்கு வெளியே எம்எல்ஏக்கள் அணி வகுத்தனர்.
பின்னர் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் கெலோட் மட்டும் சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவையை க் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:
‘‘ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிருபிக்க விரும்புகிறார். காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை எனக் கூறுபவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்றே எண்ணுகிறார். ஆனால் ஆளுநர் இதற்கு அனுமதி தர மறுக்கிறார்.’’ எனக் கூறினார்.