

வாரணாசியில் புரோகிதர்களுக்கான ரூ.100 வரி மீண்டும் விதிக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இதனை எதிர்த்து வழக்கறிஞராக இருந்த முன்னள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் வாதாடி நீதிமன்றம் இவ்வரியை ரத்து செய்யதிருந்தார்.
உ.பி.யின் தெய்வீக நகரமாக அமைந்திருப்பது காசி எனும் வாரணாசி. இங்கு ஓடும் கங்கை நதிக்கரையில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் பல்வேறு வகை சடங்குகள் செய்ய வருவது உண்டு.
இச்சடங்குகளை கங்கை கரையில் அமர்ந்து செய்யும் பக்தர்களுக்கு உ.பி. அரசால் புதிதாக ரூ.100 வரியாக தற்போது விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியாகவும் இருப்பதால் இப்பிரச்சனையில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதுகுறித்து அகில பாரத தீர்த்த புரோகிதர்கள் மகாசபையின் மூத்த பண்டிதரான கன்னைய்யா திரிபாதி கூறும்போது, ‘ஆங்கிலேயர் ஆட்சியில் வாரணாசியில் ஆட்சியராக இருந்த ஒரு ஆங்கிலேயர் இந்த வரியை முதன்முறையாக 1928 இல் புரோகிதர்களுக்கு விதித்தார்.
இதை எதிர்த்து எங்கள் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாதாடினார் நம் நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு. அதில் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட ஆங்கிலேயர் வரி மீண்டும் விதிக்கப்பட்டது கண்டனத்திற்கு உரியது.’ எனத் தெரிவித்தார்.
புனித நதியாகக் கருதப்படும் கங்கைக்கு வாரணாசியில் பல்வேறு பெயர்களில் கரைகள் அமைந்துள்ளன. இவற்றில் பொதுமக்களின் சார்பில் பல்வேறு வகை நிகழ்ச்சிகள் அன்றாடம் நடைபெறுவது வழக்கம்.
இதற்காக வாரணாசி மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிதாகக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன. கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ரூ.4,000, மதச்சடங்குகளுக்கு ரூ.500, உணவு விநியோகம் உள்ளிட்ட சமூகசேவை நிகழ்ச்சிகளுக்கு ரூ.200 எனவும் விதிக்கப்பட்டுள்ளன.
இத்தொகையானது மாவட்ட நிர்வாகம் சார்பில் கங்கையின் தூய்மை மற்றும் வளர்ச்சிப் பணிகளில் செலவிடப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து வாரணாசியின் பாஜக கவுன்சிலரான நரசிங்தாஸ் கூறும்போது, ‘ஏற்கெனவே கரோவாவின் ஊரடங்கினால் பொதுமக்கள் அவதியுறும் போது இதுபோல் புதிதாக செய்யப்படும் வரி வசூலை எதிர்ப்போம்.’ எனத் தெரிவித்துள்ளார்.
ஈமச்சடங்கு உள்ளிட்டப் பல்வேறு காரியங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்களிடம் புரோகிதர்கள் ரூ.50 முதல் ரூ.50,000 வரையும் ஆட்களுக்கு ஏற்றவாறு வசூலிப்பது உண்டு. இந்த சூழலில் புதிதாக விதிக்கப்பட்ட வரியை சடங்கு செய்ய வருபவர்களிடமே கூடுதலாக பெற்று செலுத்தவும் புரோகிதர்கள் திட்டமிட்டுள்ளனர்.