

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குண்டர்கள்முன் சரணடைந்துவிட்டது. மக்கள் பாதுகாப்பாக வாழ்வதாக உணரவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உ.பி. அரசைச் சாடியுள்ளார்.
கான்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் குண்டர்கள் கடத்தி வைத்திருந்து, பணம் கேட்டு மிரட்டினர். பணத்தைக் கொடுத்தபின்பும், அந்த நபரைக் கொலைசெய்துவிட்டு கும்பல் தப்பிச்சென்றது. இது உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ரவுடி விகாஸ் துபேவைப் பிடிக்கச் சென்ற 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 5 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டு, விகாஸ் துபேவும் கொல்லப்பட்டார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி தனது மகள்கள் கண்முன்னே குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தனது உறவினர் பெண்ணைக் கிண்டல் செய்தமைக்காக போலீஸில் அளித்த புகாருக்காக பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டார். இந்த மாதத்துக்குள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொலைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில் உ.பி. மாநில அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அவரின் பதிவில், “புதிய குண்டர்கள் ராஜ்ஜியம் வந்துள்ளது. இந்தக் காட்டாட்சியில் சட்டம் ஒழுங்கு அனைத்தும் குண்டர்களிடம் சரணடைந்துவிட்டது. உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.
சாமானிய மக்கள் கொல்லப்படுகின்றனர். வீடு, சாலை, அலுவலகம் எங்கும் மக்கள் தங்களைப் பாதுகாப்பாக உணரவில்லை. விக்ரம் ஜோஷிக்குப் பின் இப்போது சஞ்ஜித் யாதவ் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.