சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது: சபாநாயகருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது: சபாநாயகருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக்கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே, அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநிலசட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.

இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தாங்கள் எந்த செயலையும் செய்யவில்லை என்றும், எனவே சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவானது, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் மீது வரும் 21-ம் தேதி வரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது ஜூலை 24-ம் தேதி வரை சபாநாயகர் சி.பி. ஜோஷி எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை இன்றைய தினத்திற்க ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சபாநாயகர் ஜோஷி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்குவதற்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று மேல்முறையீடு மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரிக்கும்போது தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என சச்சின் பைலட் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சபாநாயகர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் ராஜஸ்தான் சபாநாயகர் கோரிக்கையை நிராகரித்தது. ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கலாம் என்று அனுமதி வழங்கியது.

இந்தநிலையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும், ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்கவும் அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறபித்தனர்.

இந்த உத்தரவால் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் மீது சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in