

கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவிட்-19 ‘அன்லாக் 2.0’ விதிமுறைகளை மீறும் விதமாக அயோத்தியில் ராமர் கோயிலுக்காக பூமி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சாகெட் கோகலே என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுவார் என்ற செய்திகள் வெளியானதையடுத்து டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சாகெட் கோகலே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் அவர் நாட்டில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, நாடு முழுதும் பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்குகள் போடப்பட்டு வரும் நிலையில் கரோனா விதிமுறைகளை மீறி பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதனால் கரோனா பரவும் ஆபத்து அதிகம் எனவே இந்த பூமி பூஜை நிகழ்ச்சியை தள்ளி வைக்க வேண்டும் என்று சாகெட் கோகலே குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயம் இந்த விழாவுக்கு நிறைய பேர் கூடும் வாய்ப்புள்ளது. நிச்சயம் இது கரோனா விதிமுறைகளுக்கு எதிரானது ஆகவே பூமி பூஜையை ஒத்திவைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சில பாஜக தலைவர்களோ ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் நாள் கரோனாவுக்கு முடிவுகட்டும் ஆரம்பம் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் பூமி பூஜையை தள்ளி வைக்க அறிவுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.