Published : 24 Jul 2020 10:35 AM
Last Updated : 24 Jul 2020 10:35 AM

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் 5 மணிநேரம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: 27-ம் தேதி மீண்டும் ஆஜராக சம்மன்

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் ஆகியிருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் நேற்று தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே வரும் 27-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராகுமாறு சிவசங்கருக்கு என்ஐஏ அதிகாரிகள் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.

திருவனந்தபுரம் என்ஐஏ அலுவலகம் அமைந்திருக்கும் போலீஸ் கிளப்பகுதிக்கு நேற்று மாலை 4 மணிக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சென்றார். ஏறக்குறைய 5 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டு இரவு 9 மணிக்குத்தான் பூஜாப்பூராவில் உள்ள தனது வீட்டுக்கு சிவசங்கர் சென்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கி என்ஐஏ அதிகாரிகளால் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள அரசின் தகவல்தொழில்நுட்பத்துறையில் ஒப்பந்த பணியாளராக ஸ்வப்னா சுரேஷ் பணியாற்றியபோது, அந்த துறையின் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது.

இந்தவிவகாரம் வெளியே தெரிந்ததையடுத்து, விசாரணை நடத்திய கேரள அரசு, சிவசங்கரை சஸ்பெண்ட் செய்து கடந்த வாரம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தங்கம் கடத்தல் தொடர்பாக கடந்த வாரம் சிவசங்கரிடம் சுங்கத்துறையினர் விசாரித்தனர். மாலை விசாரணைக்கு சென்ற சிவசங்கரனிடம் விடியவிடிய விசாரணை நடத்தி 9 மணிநேரத்துக்குப்பின் அனுப்பி வைத்தனர்.

சிவசங்கர், ஸ்வப்னா சுரேஷ்

இந்த சூழலில் நேற்று பிற்பகலில் திடீரென ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு சம்மன் அனுப்பிய என்ஐஏ அதிகாரிகள் மாலையே விசாரணைக்கு வர வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று மாலை 4 மணிக்கு விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் முன் சிவசங்கர் ஆஜராகினார். அவரிடம் 9 மணிவரை விசாரணை நடத்தியபின் என்ஐஏ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

மேலும், தலைமைச் செயலகத்தில் சிவசங்கர் பணியாற்றிய அலுவலகத்தின் சிசிடிவி கேமிரா காட்சிகளையும் கேட்டுவாங்கிச்சென்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ஐஏ அதிகாரிகள் சிவசங்கரிடம் விசாரணை நடத்தியது குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் நேற்று நிருபர்கள்கேட்டபோது அவர் பதில் அளிக்கையில் “ என்ஐஏ அதிகாரிகள் நன்றாக விசாரணை நடத்துகிறார்கள். அவர்கள் விசாரணை நடத்தும்போது ஏன் எதிர்க்கட்சிகள் கவலைப்படுகிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதுகுறித்து விசாரிக்கட்டும். இதை ஏற்கெனவே நான் சொல்லிவிட்டேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x