

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைக் குற்றம்சாட்டப்பட்டவராக விசாரிக்க புகார் அனுப்பக் கோரி ஜெய்பூர் அமர்வு நீதிமன்றம் மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்ட்ரேட்டுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை சிறப்பு நடவடிக்கை குழு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சஞ்சீவனி கடன் கூட்டுறவு சங்கத்தில் நிறைய பேர் பணம் முதலீடு செய்தனர், ஆனால் முதலீடு செய்தவர்கள் மொத்தமாக ரூ.900 கோடியை இழந்ததாக புகார் எழுந்தது, இது பெரிய ஊழல் என்று சிறப்பு நடவடிக்கைக் குழு கடந்த ஆண்டு முதல் விசாரித்து வருகிறது.
இதில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு தொடர்பிருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து ஜெய்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் மேஜிஸ்ட்ரேட்டுக்கு விசாரணைக்கான புகார் அனுப்பக் கோரி உத்தரவிட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர் ஷெகாவத்தை குற்றம்சாட்டப்பட்டவராக விசாரிக்கக் கோரியுள்ளது நீதிமன்றம்.
மக்கள் முதலீடு செய்த பணம் ஷெகாவத் மற்றும் அவரது மனைவி, மற்றும் பிறருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது, ஆனால் இதுவரை எந்த விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை.
ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்தப் புகார் எழுந்துள்ளது. ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க மத்திய அமைச்சர் சதி செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்தப் புகார் எழுந்துள்ளது. எம்.எல்.ஏ.க்களுடன் ஷெகாவத் பேரம் பேசியதாக எழுந்த புகார்களுக்கு ஆதாரமாகக் கூறப்படும் ஆடியோ விவகாரத்தை சிறப்பு நடவடிக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஷெகாவத்துக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடன் கூட்டுறவு சங்க ஊழலில் ஷெகாவத்தை விசாரிக்கும் விதமாக புகார் அனுப்புமாறு செஷன்ஸ் நீதிபதி பவன் குமார் கூடுதல் தலைமை மேஜிஸ்ட்ரேட்டுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கடன் கூட்டுறவு சங்கம் 2008-ல் ஆரம்பிக்கப் பட்டது. டெபாசிட்தாரர்களுக்கு அதிக வட்டி கொடுத்தது. போலி கடன்கள் மூலம் டெபாசிட் தொகை அபேஸ் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் எஸ்.ஓ.ஜி. கோர்ட்டில் அளித்த முதல் தகவலறிக்கையில் ஷெகாவத்தை குற்றம்சாட்டப்பட்டவராகச் சேர்க்கவில்லை. பிற்பாடு மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஷெகாவத்தைக் குற்றம்சாட்டப்பட்டவராகச் சேர்க்க மேற்கொண்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பிறகு மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டது.