

நாட்டிலேயே அதிகமாக 403 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம். இங்கு தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பெரும்பாலும் அங்குள்ள குறிப்பிட்ட சமூகங்களின் அடிப்படையில் அமைந்தவை.
உதாரணமாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் கட்சியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), யாதவர்களை முன்னிறுத்தும் கட்சியாக அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி, உயர்குடிகளாகக் கருதப்படும் தாக்கூர் மற்றும் பிராமணர்கள் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜகவும் அமைந்துள்ளன. மாநிலத்தில் பிராமணர்கள் 11 சதவீதம் உள்ளனர். மேலும் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளமும், அப்னா தளமும் முறையே ஜாட் மற்றும் குர்மி சமூகங்களை குறி வைத்து அரசியல் செய்கின்றன.
இந்நிலையில், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ரவுடி விகாஸ் துபே விவகாரம் உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில்எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதி பிராமணர்களின் காப்பாளராக விகாஸ் துபே தன்னை முன்னிறுத்தி வந்துள்ளார். இந்த சூழலில் கான்பூரின் 8 போலீஸாரை சுட்டுக்கொன்ற பின்விகாஸ் துபேவுடன் சேர்த்து என்கவுன்ட்டரான 5 சகாக்களும் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே.
இவ்வழக்கில் கடைசியாக கைதான ஜெய் வாஜ்பாய் உள்ளிட்ட 13 பேர்களில் பலரும் பிராமணர்களாக உள்ளனர். இதனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆளும் பாஜக அரசு, பிராமணர்களுக்கு எதிராக செயல்படுவதாக மறைமுகப் பிரச்சாரம் தொடங்கி உள்ளது. இதைஉணர்ந்த பாஜகவும், விகாஸ் துபே விவகாரத்தில் தம் கட்சித்தலைவர்கள் அதிகமாக விவாதிக்க வேண்டாம் என எச்சரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
விகாஸ் வழக்கின் திருப்பங்களை சமாஜ்வாதி உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியினர் ஆளும் பாஜகவுக்கு எதிராகப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். 2022-ல் வரவிருக்கும் உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் விகாஸின் மனைவியான ரிச்சா துபேவை தங்கள்கட்சிக்கு இழுக்கும் வேலைகளையும் சமாஜ்வாதி செய்து வருகிறது. இதே சூழலை பயன்படுத்தி மாயாவதியும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுடன் முஸ்லிம்கள் மற்றும் பிராமணர்களை மீண்டும் இணைக்கத் தொடங்கி உள்ளார். கடந்த 2007-ம் ஆண்டின் தேர்தலில் இம்மூன்று சமூகங்களையும் ஒன்றிணைத்து, தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தார்.
கான்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் அடங்கிய புந்தேல்கண்ட் பகுதியில் 52 சட்டப்பேரவை தொகுதிகளும் 10 மக்களவை தொகுதிகளும் உள்ளன. சமாஜ்வாதி, பிஎஸ்பியிடம் 2017 சட்டப்பேரவை தேர்தலில் 47, 2019 மக்களவையில் 10 தொகுதிகளையும் பாஜக பறித்திருந்தது. இதற்கு புந்தேல் கண்டில் பிராமணர் வாக்குகள் கணிசமாக இருந்ததும் காரணமாக அமைந்தது. எனவே, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் விகாஸ் துபே வழக்கில் புகார்களும், மறுப்புகளும் எழுந்து பிராமணர்கள் வாக்குகளை கட்சிகள் கவர முயலும் எனக் கருதப்படுகிறது.