

தெலங்கானாவில் ஏப்ரல், மே மாதங்களில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவினாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனால்ஊரடங்கு தளர்வு தொடங்கிய பிறகு கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஹைதராபாத், ரங்காரெட்டி, மேதக் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
பணிச்சுமை அதிகரித்துள்ளதால் விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும் என மருத்துவப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஹைதராபாத்தில் போலீஸார், ஊடகத் துறையினர், சுகாதார துறையினர், துப்புரவு தொழிலாளர்கள் என பலருக்கும் கரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில், மாநில சுகாதாரத் துறை இயக்குநர் சஞ்சீவ ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தெலங்கானாவில் 49,259 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரத்தில் இது 50 ஆயிரத்தை கடந்து விடும். நகர்ப்புறங்களில் சமூகப் பரவல் தொடங்கியுள்ளது. எனவே மக்கள்மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். பணிச்சுமை காரணமாக மருத்துவத் துறை ஊழியர்கள் தினம் ஒரு மனுவைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகின்றனர். இனி யாரும்இவ்வாறு செய்ய வேண்டாம்். மக்களின் உயிரை காப்பது நமது கடமை. அதை நாம் தொய்வின்றி செய்வோம்” என்றார்.