

கான்பூரின் விகாஸ் துபேயை அடுத்து ரவுடி அரசியல்வாதியான அத்தீக் அகமது(55) மீதானப் பிடியை இறுக்குகிறது உத்திரப்பிரதேசக் காவல்துறை. இவர் அம்மாநில சட்டப்பேரவையில் 5 முறை எம்எல்ஏவாகவும் ஒருமுறை மக்களவை எம்.பியாகவும் இருந்தவர்.
கான்பூரில் விகாஸ் துபே கும்பலால் 8 போலீஸார் சுடப்பட்ட பின் உபி கிரிமினல்களின் பட்டியலை தூசிதட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதில், விகாஸுக்கு அடுத்தபடியாக உபி கிழக்குப் பகுதியை சேர்ந்த அத்தீக் அகமது அம்மாநிலக் காவல்துறையால் குறி வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது குஜராத்தின் அகமதாபாத் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அத்தீக் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 35 வழக்குகள் நடைபெறுகின்றன. இவர் மீதான வழக்குகளை விரைந்து முடித்து அத்தீக்கிற்கு தண்டனை பெற்றுத்தர உபி அரசு முனைப்பு காட்டி வருகிறது.
கடந்த 1983 ஆம் ஆண்டில் அத்தீக் மீது முதல் வழக்கு உ.பியில் பதிவானது. இதை தொடர்ந்து பல வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கிய அத்தீக் அவ்வப்போது தலைமறைவாவதும், அவரை உ.பி போலீஸார் தேடுவதும் வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், சிறையில் சிக்காமல் தப்பியிருக்க வேண்டி உ.பி அரசியலில் குதித்தார் அத்தீக். இதற்கேற்ப 1989 இல் உ.பியின் அலகாபாத்தின் மேற்கு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.
தொடர்ந்து 1991, 1993, 1996 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளின் சட்டப்பேரவை தேர்தலிலும் அத்தீக்கிற்கு எம்எல்ஏவாகும் வாய்ப்பு கிடைத்தது. இதில் முதல் 3 முறை சுயேச்சையாகவும் மற்ற இரண்டில் சமாஜ்வாதி மற்றும் அப்னா தளம் கட்சிகள் சார்பிலும் அத்தீக் போட்டியிட்டிருந்தார்.
2004 மக்களவை தேர்தலில் பிரயாக்ராஜுக்கு அருகிலுள்ள பூல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் எம்.பியாகி இருந்தார் அத்தீக். இதன் பிறகு வந்த பல தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிட்ட அத்தீக்கால் ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை.
இதனிடையே, அத்தீக் மீது சுமார் 250 கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருந்தன. இவற்றில் அலகாபாத்தின் பகுஜன் சமாஜ் எம்எல்ஏவான ராஜு பால் கொலை வழக்கில் அத்திக் முக்கியக் குற்றவாளி.
அக்கட்சியின் ஆட்சியில் இக்கொலை நடைபெற்ற பின் உபி முதல்வராக இருந்த அதன் தலைவி மாயாவதி ஒரே நாளில் அத்தீக் மீது 100 வழக்குகள் பதிவு செய்தார். இவை பிறகு உபி உயர்நீதிமன்றத்தில் அத்தீக் தொடுத்த வழக்கால் தள்ளுபடி செய்யப்பட்டன.
எனினும், அத்தீக் மீதானப் பெரும்பாலான வழக்குகள் சாட்சிகள் இல்லை என தள்ளுபடியாகி தற்போது 35 மட்டும் நடைபெறுகின்றன. 11 வழக்குகள் உபிக்கு வெளியே உள்ள மாநிலங்களை சேர்ந்தவை.
விகாஸ் என்கவுன்டருக்கு பின் அத்தீக்கின் வழக்குகளை உபி அரசு கையில் எடுத்துள்ளது. இதில் அவரது பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் தீவிர முயற்சியிலும் இறங்கியுள்ளது.