Last Updated : 23 Jul, 2020 04:26 PM

 

Published : 23 Jul 2020 04:26 PM
Last Updated : 23 Jul 2020 04:26 PM

இந்தியாவின் வளர்ச்சி எந்திரமாக மாற வடகிழக்கு மாநிலங்களுக்கு திறன் இருக்கிறது: பிரதமர் மோடி புகழாரம்


இந்தியாவின் வளர்ச்சி எந்திரமாக மாறுவதற்கு வடகிழக்கு மாநிலங்களுக்கு திறமையும், திறனும் இருக்கிறது. ஒட்டுமொத்த வடகிழக்குப்பகுதியிலும் தற்போது அமைதி நிலவிவருகிறது என்று பிரதமர் மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.

கிராம புற வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. மணிப்பூரில் உள்ள 1,185 குடியிருப்புகளில் உள்ள ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 749 வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்புகளை அளிப்பதற்காக மத்திய அரசு மணிப்பூர் மாநிலத்துக்கு நிதியுதவி அளித்துள்ளது.

மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டம், கிரேட்டர் இம்பால் பகுதியில் மீதமிருக்கும் வீடுகள், 25 சிறு நகரங்கள், 1,731 கிராமப்புற குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 2,80,756 வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படும்.

இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

மணிப்பூரில் வரலாற்று ரீதியாகவே பல்வேறு தடைகள் இருந்தன. பல ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து வந்தது. இன்று அனைத்தும் நிறுத்தப்பட்டு வடகிழக்குப் பிராந்தியத்தில் அமைதி நிலவுகிறது.

திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் வன்முறை பாதையிலிருந்து விலகி சிறந்த வாழ்க்கையை நோக்கி நகர்ந்துவிட்டனர். வடகிழக்கு மாநிலங்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

நெடுஞ்சாலைகள் அமைத்தல், ரயில்போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், கரோனா வைரஸ் பாதிப்பின்போதுகூட இங்கு எந்த பணிகளும் நிறுத்தப்படவில்லை.

கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்வரை நாம் கரோனா வைரஸுக்கு எதிராக போராட வேண்டும். முழுவீச்சில் வளர்ச்சிப்பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் விதத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு அதிகமான முக்கியத்துவமும், சந்தைப்படுத்துதலும் செய்யப்படுகிறது. விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் மற்றும் அது தொடர்பான தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்தியாவின் வளர்ச்சி எந்திரமாக மாறும் திறன் வடகிழக்கு மாநிலங்களுக்கு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து மூங்கில் இறக்கமதி செய்வதை மாற்றும் வல்லமை வடகிழக்கு மாநிலங்களுக்கு இருக்கிறது, மூங்கில் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும்.

தேசிய மூங்கில் இயக்கத்தில் மிகப்பெரிய அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது நிச்சயம் வடகிழக்கு மாநிலஇளைஞர்களின் வாழ்வுக்கு உதவும், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்க முடியும்.

சுகாதாரம், கல்வி, திறன்மேம்பாடு ஆகியவற்றுக்கான புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்க முடியும். விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வடகிழக்கு மாநில இளைஞர்களுக்கு அதிகமான திறமை இருக்கிறது. இதற்காகவே விளையாட்டுப்பல்கலைக்கழகம், விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மணிப்பூர், இம்பால் மக்களுக்கு இந்த நாளும், குடிநீர் திட்டமும் மிகப்பெரிதாக இருக்கும். இதுநாள் வரை அவர்கள் சந்தித்துவந்த தண்ணீர் பிரச்சினை படிப்படியாக்க குறையும். குறிப்பாகப் பெண்கள் நீண்டதொலைவு சென்று குடிநீர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அடுத்த 20 முதல் 22 ஆண்டுகளை மனதில் வைத்தும், லட்சக்கணக்கான மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதை மனதிற்கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x