Published : 23 Jul 2020 04:07 PM
Last Updated : 23 Jul 2020 04:07 PM

தொழில்நுட்பம் வாயிலாக புதிய பணி வாய்ப்புகளை பெற முடியும்: பியூஷ் கோயல்

புதுடெல்லி

தொழில்நுட்பம் வாயிலாக வேலை வாய்ப்பையும் புதிய பணி வாய்ப்புகளையும் பெற முடியும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

“மாறிவரும் பொருளாதார சூழல்: திறன் அறிதல் மற்றும் உருவாக்குதல்” எனும் தலைப்பில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் எஸ். ஆர். எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, இன்று ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் கருத்தரங்கினை மத்திய வர்த்தக தொழில்துறை மற்றும் ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அமைச்சர் தமது தொடக்க உரையில் கூறியதாவது:
தொழில்நுட்பமானது, நாடுகளை, பொருளாதாரத்தை, மக்களின் வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துள்ளது.
தொழில்நுட்ப மாற்றத்தை படிப்படியாக மேற்கொள்ள முடியும். இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்களை தயார்படுத்த, அவர்களுக்கு கற்பித்து, திறனை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் நாம் தொழில்நுட்பத்திற்கும் மக்களுக்குமான இடைவெளியை நிரப்ப முடியும். இந்திய பட்டதாரிகள் நாட்டின் எதிர்காலத்தையும் அதன் போக்கையும் மாற்றவல்ல முக்கியமான நிலையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகின் தலைவிதியையே மாற்றும் வல்லமை பெற்றவர்கள்.

உலகமயமாக்க உலகின் போட்டிகளை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக்கொள்வது பலனளிக்கும். நமது போட்டித்திறன்களை வலுப்படுத்திக்கொள்ளவும் உற்பத்தித்திறனை உயர்த்தவும் நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் வாயிலாக வேலை வாய்ப்பையும் புதிய பணி வாய்ப்புகளையும் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். சமூக பொருளாதார சமத்துவத்திற்கு அடிகோலும் ஜனநாயக முறையிலான வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் பெருமளவில் உதவிகரமாக இருக்கும்.

இந்தியாவின் இணைய வழி கல்வி குறித்த ஆய்வுக்கட்டுரையை வெளியிட்ட
இந்திய தொழில்துறை கூட்டமைப்புக்கு எனது பாராட்டுக்கள். நாட்டின் கொள்கை வடிவமைப்பாளர்கள், கல்வியாளர்களுக்கு உலக அளவில் சிறந்த நடவடிக்கைகளுடன் தொடர்பு ஏற்படுத்தவும், தங்கள் திறன்களை மறு மதிப்பீடு செய்யவும் இது தொடக்கப்புள்ளியாக இருக்கும்.


பிரதமர் நரேந்திர மோடி தனது தொலைநோக்கு பார்வையால் யோகாவை உலகம் முழுவதிற்கும் கொண்டு சென்றார். கடந்த மாதம் கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினம் இப்போது நமக்கு கிடைத்துள்ளது. யோகாவின் ஆற்றல் குறித்து உலகம் வியந்த வண்ணம் உள்ளது.

இந்தியாவின் பாரம்பரியப் பெருமைகளை உலகிற்கு வழங்கும் அதே வேளையில் நாம் உலகின் நன்மைபயக்கும் அம்சங்களை கற்கவும், ஏற்கவும் வேண்டும். யோகா தொழில்நுட்பத்தை அளிப்பதில் இந்தியா முன்னோடியாக திகழ இயலும். அது அறிவியல்பூர்வமான தொழில்நுட்பம். யோகாவின் ஒவ்வொரு அம்சமும் ஒரு புதிய விஷயத்தை கற்றுத்தருகிறது. அது உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும் சுத்திகரிக்கிறது.

இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் மற்றும் வளமைக்கு, தற்சார்பு இந்தியா திட்டம் வரையறுக்கும் கருப்பொருளாக இருக்கும். கல்வி பிரதானமாக இருக்கும் அதே தருணத்தில், நாம் நமது தலைவிதியை நிர்ணயிக்கும் தலைவர்களை வளர்த்தெடுக்கவும், போற்றிப் பாராட்டவும் தவறக்கூடாது.

வேட்கையுடனும் கருணை உள்ளத்துடனும் மேற்கொள்ளப்படும் பணியே சிறந்தது என்பதால் அதற்காக நாம் நமது இளைய தலைமுறையை தயார்படுத்த வேண்டும். இந்தியாவின் வலிமையை அடிப்படையாக கொண்டு போதிலும் உலகளாவிய ஈடுபாட்டையும் கைக்கொள்ள வேண்டும்.
நமது உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதோடு நில்லாமல் உலகளாவிய போட்டியை எதிர்கொண்டு உலகத்திற்கே விநியோகிக்கும் தலைமைப்பண்பு கொண்ட நாடாக விளங்க 20 துறைகளை நமது அரசு அடையாளம் கண்டுள்ளது.

இந்திய ரயில்வே, தேசிய ரயில் போக்குவரத்து பல்கலைக்கழகத்தை ஏற்படுத்துகிறது. ரயில்வேயில் பணியாற்றும் ஆண், பெண் பணியாளர்களுக்கு மறு திறனாக்க அறிவை வழங்கவும், ஏற்கனவே இருக்கும் திறனை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.”

மத்திய வர்த்தக தொழில்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x