

ஊதிய உயர்வு கோரி கடந்த 3 ஆண்டுகளாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு(ஐபிஏ) இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஆண்டுக்கு 15 சதவீத ஊதிய உயர்வுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐபிஏவுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.7,900 கோடி செலவாகும்.
இந்த உடன்பாட்டின் மூலம் வங்கித்துறையில் பணியாற்றும் 8.50 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த ஊதிய உயர்வு 2017, நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் பேச்சு நடத்தி வந்தன. இதுவரை 35 சுற்றுக்கள் வரை பேச்சு நடத்தப்பட்டன. கடைசியாக கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாக மார்ச் 16-ம் தேதிகூடபேச்சு நடத்தப்பட்டது ஆனால், உடன்பாடு எட்டவில்லை.
கடந்த 2018-மே மாதம் நடந்த பேச்சுவார்த்தையின்போது வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீதம் மட்டுேம ஊதிய உயர்வு தரமுடியும் என ஐபிஏ தெரிவித்தது. இதனால் மே 30-ம் தேதி முதல் இருநாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதன்பின் தொடர்ந்து நடந்த பேச்சு வார்ததையில் இப்போது முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதுக்குறித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (ஐபிஏ) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு(யுஎப்பியு), இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இடையே நடந்த பேச்சுவாரத்தையில் ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் படிகளில் ஆண்டுக்கு 15 சதவீதம் உயர்வு வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக ரூ.7,898 கோடி செலவாகும்.
மேலும், வங்கி ஊழியர்கள் சங்கங்கள், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு(ஐபிஏ) இடையே நடந்த பேச்சுவார்த்தையில் செயல்திறன் தொடர்புடைய ஊக்கத்தொகை(பிஎல்ஐ) திட்டத்தை பொதுத்துறை வங்கி ஊழியர்களிடம் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் தனியார், மற்றும் பொதுத்துறை வங்கிகள் இந்த திட்டத்தை ஏற்கலாம்.
இந்த திட்டம் வங்கிகளின் செயல்பாடு, லாபம் ஆகியவற்றைப் பொருத்து அமையும். அதேபோல ஊழியர்களின் அடிப்படை ஊதியம், டிஏவுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத்திட்டத்தில் வங்கிகளின் பங்களிப்பு முன்பு 10 சதவீதம் இருந்தது. இது 14 சதவீதமாக உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைவர் சுனில் மேத்தா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஐபிஏ, யுஎப்பியு இடையே இன்று நடந்த பேச்சுவார்த்தையில் வங்கி ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாச்சலம் கூறுகையில் “ ஏறக்குறைய 35 சுற்றுப் பேச்சுக்குப்பின் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இது மனநிறைவு அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு மற்றும் படிகள் உயர்வு குறித்து அடுத்த சில நாட்களில் இறுதி செய்யப்பட்டு முழுமையாக வெளியிடப்படும் என்று ஐபிஏ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.