

ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது.
கரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதி நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதிவரை காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கடைகள்திறக்கவும் மக்கள் நடமாட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மிகவும் அவசியம் என்றால் மட்டுமே மக்கள் வெளியில் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு காலத்தில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு தேவையின்றி வெளியில் சுற்றுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் விநியோகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தியுள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது.
20 அர்ச்சகர்கள் உட்பட 170-க்கும் மேற்பட்ட தேவஸ்தான ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவியதால், சர்வ தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஆனால் சுவாமிக்கு தினசரி பூஜைகளை நிறுத்தாமல் கோயிலில் பக்தர்கள் அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் தேவஸ்தானம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
65 ஆயிரம் பேர் பாதிப்பு
ஆந்திராவில் நேற்று காலைவரையிலான 24 மணி நேரத்தில் 6,045 பேருக்கு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 64,713 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 31,763 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 32,127 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.