

பாபர்மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக நாளை நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நேரில் ஆஜராக இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அவரைச் சந்தித்துப் பேசினார்.
1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளதால், வழக்கின் விசாரணை நாள்தோறும் நடந்து வருகிறது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் சிஆர்பிசி 313ன் கீழ் நீதிபதி முன் காணொலி மூலம் வாக்குமூலம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வெள்ளிக்கிழமை(நாளை) காணொலி வாயிலாக நீதிபதி முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளார்.
இந்த சூழலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் ஆகியோர் நேற்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை அவரின் வீட்டில் சென்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த சந்திப்பில் என்ன விவரங்கள் பேசப்பட்டன என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.
இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் நிருபர்களிடம் கூறுகையில் “ பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடன் வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்புதான், வேறு ஒன்றும் இல்லை” எனத் தெரிவி்த்தார்.
இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்று ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த பூமி பூஜை விழாவில் பங்கேற்க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக 150 முக்கிய விஐபிக்கள் உள்பட 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.