

கேரளாவுக்கு தங்கம் கடத்திய வழக்கில், தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘‘கேரளாவுக்கு தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்திய வழக்கில், பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி நடந்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தின் பெயரில் அனுப்பி வைக்கப்பட்ட பார்சலில் தங்கம் கடத்தியது கண்டுபிடிக்
கப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.
இதில், தூதரக அலுவலகத்தில் செய்தி தொடர்பாளராக பணிபுரிந்த பி.எஸ்.சரித், தூதரகத்துக்கு பார்சல்களை அனுப்பிய முன்னாள் துணைத் தூதரக செயலர் ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர் மற்றும் ஷார்ஜாவைச் சேர்ந்த பாசில் பரீத் ஆகிய 4 பேர் மீது என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையில், ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோரின் காவலை நீட்டிப்பதற்கான அறிக்கையை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், என்ஐஏ கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.
அதில் கூறியிருப்பதாவது:
ஸ்வப்னா உட்பட குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் இந்தியாவில் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பெரிய அளவில் சதி செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த வழக்கில் 4 பேர் இணைந்தும் தனித்தனியாகவும்
பல்வேறு சதிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்வப்னா மற்றும் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சந்தீப் ஆகிய இருவரும், நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அதிகளவில் தங்கம் கடத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், தங்கக் கடத்தலில் பலன் அடைந்தவர்கள், பணம் பெற்றவர்களின் விவரங்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த சதி வேலைகளுக்கு மூளையாக கே.டி.ரமீஸ் என்பவர் செயல்பட்டுள்ளது விசாரணையின் போது தெரியவந்தது.
‘இந்த ஊரடங்குக் காலத்தில் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. எனவே, இந்த நேரத்தில் கேரளாவுக்கு அதிகளவிலும், அதிக முறையும் தங்கம் கடத்த வேண்டும்’ என்று கே.டி.ரமீஸ் கூறியதாக சந்தீப் நாயர் ஒப்புக் கொண்டுள்ளார்.
கேரளாவுக்கு அதிகமாகத் தங்கம் கடத்தி அதன்மூலம் பெற்ற பணத்தை தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் ஐக்கிய அரபு அமீரக நாட்டுனான இந்திய உறவிலும் சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளனர். எனவே, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரின் காவலை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு என்ஐஏ தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் ஆகியோரை காவலில் விசாரிக்க 24-ம் தேதி வரை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.