Last Updated : 22 Jul, 2020 08:49 PM

 

Published : 22 Jul 2020 08:49 PM
Last Updated : 22 Jul 2020 08:49 PM

விகாஸ் துபே என்கவுன்ட்டர்: ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையில் விசாரணை ஆணையம் ; உச்ச நீதிமன்றம் கெடு

உத்தரப்பிரதேசம் கான்பூரில் ரவுடி விகாஸ் துபே போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது, அவரைப் பிடிக்கச் சென்ற டிஎஸ்பி உள்பட 8 போலீஸார் ரவுடிகளால் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு இன்று தாக்கல் செய்த வரைவு அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்த விசாரணை ஆணையம் ஒரு வாரத்தில் விசாரணையைத் தொடங்கி, 2 மாதத்துக்குள் முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

இந்த விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகானும், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷசி காந்த் அகர்வால், ஓய்வுபெற்ற போலீஸ் டிஜிபி கே.எல்.குப்தா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

65-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, கொலைமுயற்சி, ஆட்கடத்தல் ஆகிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே. கான்பூர் அருகே பிக்ரூ எனும் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைக் கைது செய்ய போலீஸ் டிஎஸ்பி தலைமையில் குழுவினர் கடந்த 2-ம் தேதி சென்றனர்.

ஆனால், ரவுடி விகாஸ் துபேயின் ஆட்கள், போலீஸார் மீது துப்பாக்கியால் மறைந்திருந்து சுட்டு தாக்குதல் நடத்தியதில் போலீஸ் டிஎஸ்பி உள்பட 8பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து, உ.பி. போலிஸார் தனிப்படை அமைத்து விகாஸ் துபேயை தேடி வந்தனர்.

விகாஸ் துபேயை பிடிக்கும் முன் அவரின் கூட்டாளிகள் 5 பேரை வெவ்வேறு இடங்களில் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் அவர்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, கடந்த 10-ம் தேதி மத்தியப்பிரதேசம் உஜ்ஜைன் நகரில் விகாஸ் துபேவை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து கான்பூருக்கு விகாஸ் துபேயை அழைத்துவரும் போது, வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது அங்கிருந்து விகாஸ் துபே தப்பிக்க முயன்றபோது அவரை போலீஸார் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

ஆனால், விகாஸ் துபேவும், அவரின் கூட்டாளிகள் 5 பேர் கொல்லப்பட்டது போலியான என்கவுன்ட்டர் இதை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகறும், தனிமனிதர்களும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதேபோல, ரவுடி விகாஸ் துபேவை பிடிக்கச் சென்றபோது, போலீஸ் டிஎஸ்பி உள்பட 8 பேர் கொல்லப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று சிலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் நடந்தது வந்தது.

கடந்த வாரம் உ.பி. அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், விகாஸ் துபே என்கவுன்ட்டர், 8 போலீஸார் கொல்லப்பட்டது தொடர்பாக உ.பி. கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் பூஸ்ரெட்டி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தது. இந்த குழு விகாஸ் துபே, போலீஸார், அரசியல்வாதிகளுக்கு இடையிலான தொடர்புகுறித்து விசாரிக்கும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த மனு மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் காணொலி மூலம் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உத்தரப்பிரதேச அரசு தரப்பில் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார். அப்போது, அவர் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், ரவுடி விகாஸ் துபே அவரின் கூட்டாளிகள் 5 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது, 8 போலீஸார் கொல்லப்பட்டது ஆகியவை பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சவுகான் தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதி் அகர்வால், ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி குப்தா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த வரைவு அறிக்கையை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு ஏற்றுக்கொண்டனர். அதன்பின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்த ஓய்வு பெற்ற நீதிபதி சவுகான் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவை ஏற்கிறோம். இந்த விசாரணைக் குழுவின் மிக முக்கியமாக விசாரிக்க வேண்டியது, விகாஸ் துபே எவ்வாறு பரோலில் அல்லது ஜாமீனில் வெளியே வந்தார் என்பதுதான். விகாஸ் துபே சிறையிலேயே இருந்திருந்தால், இந்த சம்பவங்கள் அனைத்தும் நடந்திருக்காது.

64 கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் ஆபத்தான விகாஸ் துபே, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டும் பரோல், ஜாமீனில் வெளியே வந்தது இந்த நிர்வாக அமைப்பு முறையில் தோல்விதான்.

ரவுடி துபே எவ்வாறு சிறையில் இருந்து வெளியே வந்தார் எனும் உண்மையை முதலில் விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும். விகாஸ் துபே வெளிேய வர மாநில அரசு அதிகாரிகள், போலீஸார் என யாரெல்லாம் துணை இருந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

விகாஸ் துபேயின் பரோல் அல்லது ஜாமீனை ரத்து செய்ய மாநில அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதையும் விசாரிக்க வேண்டும்.

விகாஸ் துபேவுக்கும் போலீஸாருக்கும், மாநில அரசு அதிகாரிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருந்ததா என்பதையும் விசாரிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

ஒருவாரத்துக்குள் விசாரணை ஆணையம் தனது பணியைத் தொடங்க வேண்டும். பணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து 2 மாதத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை மாநில அ ரசுக்கும், நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்தஆணையத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டும். ஆணையத்தின் தலைவர் உத்தரவின் பெயரில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். அதேசமயம், உத்தரப்பிரதேச அரசு ஏற்கெனவே அமைத்த சிறப்பு விசாரணைக் குழு தனது விசாரணையைத் தொடரவோ, இந்த சம்பவம் தொடர்பாக பல்ேவறு கோணங்களில் விசாரணை நடத்தவோ தடையில்லை.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x