உரம் ஊழல் வழக்கு: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப்பிரிவு திடீர் சோதனை

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் : கோப்புப்படம்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் : கோப்புப்படம்
Updated on
2 min read


உரம் ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரருக்கு நாடுமுழுவதும் சொந்தமான இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டு இருக்கும் சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே அதிகார மோதல் நடந்து வரும் நிலையில் இந்த ரெய்டு நடந்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாரக்கப்படுகிறது.

இந்த வழக்கு கடந்த 2007-ம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருந்தபோதிலும் இப்போது ரெய்டு நடத்தப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

முதல்வர் அசோக் கெலாட்டின் மூத்த சகோதரர் அக்ராசின் கெலாட். இவர் அனுபம் கிருஷி எனும் உர நிறுவனத்தையும், விதைகள் உற்பத்தி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

சிஆர்பிஎப் பாதுகாப்புடன் சோதனை நடத்திவரும் அமலாக்கப்பிரிவினர்: படம் ஏஎன்ஐ
சிஆர்பிஎப் பாதுகாப்புடன் சோதனை நடத்திவரும் அமலாக்கப்பிரிவினர்: படம் ஏஎன்ஐ

கடந்த 2007-2009ல் ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு பொட்டாஷியம் உரம் இறக்குமதி செய்ததில் ரூ.60 கோடி அளவுக்கு பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அசோக் கெலாட் சகோதரருக்கு சுங்கத்துறை ரூ.7 கோடி அபராதமும் விதித்தது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மத்திய அமலாக்கப்பிரிவுக்கு வழக்கு மாற்றறப்ட்டு அவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு முதல் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் உர ஊழல் வழக்கில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவினர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசின் கெலாட்டுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கில் அசோக் கெலாட்டின் மகன் வைவப் நடத்திவரும் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ள ஜெய்ப்பூர் தொழிலதிபர் ரத்தன் காந்த் சர்மாவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் அமலாக்கப்பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 13-ம் தேதி ராஜஸ்தானைச் சேர்ந்த 3 தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டின் பெயரில் 40 இடங்களில் அமலாக்கப்பிரிவினர் சோதனை நடத்தி ரூ.12 கோடி மதிப்புள்ள ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் ராஜஸ்தானில் 6 இடங்கள் , குஜராத்தில் 4 இடங்கள், மேற்கு வங்கம் டெல்லி உள்ளிட்டவை என மொத்தம் 13 இடங்களில் அமலாக்கப்பிரிவினர் சிஆர்பிஎப் படையின் துணையுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஜோத்பூர் மாவட்டத்தில் மான்டோரில் அசோக் கெலாட்டின் பண்ணை வீட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் துணையுடன் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் கூறுகையில் “ பிரதமர் மோடி நாட்டில் ரெய்டு ராஜ்ஜியத்தை உருவாக்கி இருக்கிறார். ஆனால், நாங்கள் இதற்கெல்லாம் அச்சப்படவில்லை. ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்கும் மத்திய அரசின் திட்டம் தோல்வி அடைந்தவுடன், அசோக் கெலாட்டின் மூத்த சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடக்கிறது” என விமர்சித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in