Published : 22 Jul 2020 02:59 PM
Last Updated : 22 Jul 2020 02:59 PM

மாநிலங்களவை எம்.பி.க்களாக 45 பேர் பதவியேற்பு: ஜோதிராதித்ய சிந்தியா, மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்பு

பாஜக சார்பில் தேர்வான ஜோதிராதிய சிந்தியா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் இன்று மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

மாநிலங்களவைக்கு ஒவ்வொரு 2 ஆண்டுகள் இடைவெளியில் தேர்தல் நடக்கும். கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா முழுவதும் 61 எம்.பி.க்களுக்கான தேர்தல் கரோனா ஊரடங்கிற்கு முன்னரே நடந்து முடிந்தது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் 42 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது.

அதில், ஜோதிராதித்ய சிந்தியா, மல்லிகார்ஜுன கார்கே, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் முதன்முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஏற்கெனவே பதவியேற்றிருக்க வேண்டிய நிலையில், கரோனா காரணமாக டெல்லிக்குப் போக்குவரத்து வசதி ரத்து செய்யப்பட்டதால் பதவியேற்பு ஒத்தி வைக்கப்பட்டது.

நாடுமுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் டெல்லியில் மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு முன் பதவி ஏற்றனர்.

கூட்டத்தொடர் நடைபெறாத காலத்தில் மாநிலங்களவை அறையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

மத்திய பிரதேசத்தில் இருந்து பாஜக சார்பில் தேர்வான ஜோதிராதிய சிந்தியா, விவேக் தாகூர், சுமேர் சிங் சோலங்கி, நர்ஹரி அமின் உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, தீபேந்தர் சிங் ஹூடா, திக்விஜய் சிங் இன்று மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு முகக்கவசம் அணிந்த நிலையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் காங்கிரஸின் பலம் 41 ஆக குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x