

உத்திரப் பிரதேசத்தில் உறவுப் பெண்ணைக் கேலி செய்தவர்கள் மீது புகார் அளித்த பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
டெல்லியை ஒட்டியிருக்கும் உ.பி.யின் காஜியாபாத் நகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி. இவர் நேற்று முன்தினம் இரவு தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
பிரதாப் விஹார் அருகே வந்து கொண்டிருந்த ஜோஷியை திடீர் என சூழ்ந்த சில இளைஞர்கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டனர். இந்தச் சம்பவத்தில் ஜோஷி உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவர் சிகிச்சை பலனின்றி இன்று விடியற்காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் ரவி என்ற குற்றவாளி தலைமையில் இதைச் செய்ததாக 9 பேர் கைதாகி உள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் 4 தினங்கள் முன்பாக ஜோஷி, சுமார் 6 இளைஞர்கள் மீது காஜியாபாத் நகரக் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பலியான விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு நிதி உதவியாக ரூ.10 லட்சம் அளிப்பதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இத்துடன் அவரது குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்பதுடன், ஜோஷியின் மனைவி அல்லது மகளுக்கு அரசுப் பணியையும் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் விக்ரமின் சகோதரரான அங்கித் ஜோஷி கூறும்போது, ''தங்கள் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட பின் அந்த இளைஞர்கள் தொடர்ந்து எங்கள் குடும்பத்தாரை மிரட்டி வந்தனர். இந்தத் தகவலை போலீஸாருக்கு அளித்தும் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் நடவடிக்கை எடுத்திருந்தால் ஜோஷி சுடப்பட்டிருக்கமாட்டார்'' எனத் தெரிவித்தார்.
இப்பிரச்சினையில் ஜோஷி சுடப்பட்டவுடன் எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர்கள் உ.பி. அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். உ.பி.யில் ராமராஜ்யம் அமைப்பதாகக் கூறி குண்டர் ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.