

ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யும் நடவடிக்கையை வரும் 24-ம் தேதி வரை ஒத்திவைக்கக் கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சட்டப்பேரவை சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநிலத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும், அவர்களைத் தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநில சட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.
இந்த நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் கடந்தவாரம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசரித்த உயர் நீதிமன்றம் 5 நாட்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் (21-ம் தேதி வரை) என்று உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த மனு நேறறு விசாரிக்கப்பட்ட நிலையில், வரும் 24-ம் தேதி வரை சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்கம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுப்பதைத் தவிர்க்குமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வரை சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க விதித்த தடையை எதிர்த்து சபாநாயகர் சி.பி.ஜோஷி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதுகுறித்து சபாநாயகர் சார்பில் மனுத்தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் சுனில் பெர்னாண்டஸ் கூறுகையில், “காங்கிரஸ் கொறடா உத்தரவை மீறிய எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வெள்ளிக்கிழமை வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சபாநாயகர் உத்தரவில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. இதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மற்றொரு வழக்கில் இன்று ஆஜரான மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவிடம் கூறுகையில், “அவசரமாக விசாரிக்கக் கோரும் மனுக்களை எவ்வாறு பட்டியலிடுவது தொடர்பாக தனியாக விதிமுறை வகுக்க வேண்டும். ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் அவசர மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனால், அது பட்டியலிடப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.