உ.பி.யில் கொடூரம்: காஜியாபாத்தில் மகள்கள் கண்முன்னே பத்திரிகையாளர் சுட்டுக்கொலை; 9 பேர் கைது

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி : படம் | ஏஎன்ஐ.
கொல்லப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி : படம் | ஏஎன்ஐ.
Updated on
2 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் பெற்ற மகள்கள் கண்முன்னே, பத்திரிகையாளர் ஒருவர் சுடப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஜியாபாத் விஜயநகரா பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் ஜோஷி. இவர் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 16-ம் தேதி தன்னுடைய மருமகளைச் சிலர் கிண்டல் செய்தது தொடர்பாக விக்ரம் ஜோஷி போலீஸில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பைக்கில் தனது இரு மகள்களுடன் விக்ரம் ஜோஷி வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.

அப்போது திடீரென 10 பேர் கொண்ட கும்பல், சாலையில் அவரின் பைக்கை மறித்து, அவரைக் கீழே தள்ளித் தாக்கியது. அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பிவிட்டது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

போராட்டம் நடத்தும் பத்திரிகையாளர்கள், உறவினர்கள் : படம் | ஏஎன்ஐ.
போராட்டம் நடத்தும் பத்திரிகையாளர்கள், உறவினர்கள் : படம் | ஏஎன்ஐ.

தனது தந்தையை சிலர் தாக்கியபோது, காப்பாற்ற முடியாமல் இரு மகள்களும் பயந்து ஓரமாக ஒளிந்தனர். விக்ரம் ஜோஷி துப்பாக்கியால் சுடப்பட்டு சாலையில் கிடந்தபோது, அவரைக் காப்பாற்ற அவரின் இரு மகள்களும் உதவிக்காக பலரிடம் முறையிடும் காட்சியும் கேமராவில் பதிவாகியுள்ளது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விக்ரம் ஜோஷி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி : படம் | ஏஎன்ஐ
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி : படம் | ஏஎன்ஐ

இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், இதுவரை 9 பேரைக் கைது செய்துள்ளனர். ஒருவர் மட்டும் சிக்கவில்லை.

இதுகுறித்து காஜியாபாத் எஸ்.பி. கலாநிதி நைதானி கூறுகையில், “இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் கைது செய்யப்படவில்லை. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இரு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவி்த்தார்.

பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டதையடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்ப மறுத்து மருத்துவமனை முன்பு உறவினர்கள், நண்பர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டதற்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in