தேச துரோக வழக்கில் கைதான ஷார்ஜில் இமாமுக்கு கரோனா தொற்று

ஷார்ஜில் இமாம்
ஷார்ஜில் இமாம்
Updated on
1 min read

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர் ஷார்ஜில் இமாமுக்கு கரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஷார்ஜில் இமாமை பிஹார் மாநிலம் ஜகானாபாத்தில் டெல்லி போலீஸார் கைது செய்தனர். வட கிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் எனக் கூறி இவர் பேசிய வீடியோ பதிவு வெளியாகி வைரலானது.

இதன் அடிப்படையில் ஷார்ஜில் இமாம் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தி மத்தியில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் அவரை சிறையிலிருந்து டெல்லி நீதிமன்றம் அழைத்து செல்வதற்காக ஷார்ஜில் இமாமுக்கு கடந்த ஜூலை 17-ம் தேதி உடல் பரிசோதனை நடத்தியதில் கரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவிலிருந்து குணமடைந்ததும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in