டெல்லி கலவரங்களை திட்டமிட்டு நடத்தியது பாஜக: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கடும் குற்றச்சாட்டு 

டெல்லி கலவரங்களை திட்டமிட்டு நடத்தியது பாஜக: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கடும் குற்றச்சாட்டு 
Updated on
1 min read

கடந்த பிப்ரவரியில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் அதன் தொடர்ச்சியான கலவரங்கள் குறித்து ஆம் ஆத்மி வாயைத்திறக்காமல் இருக்கிறது என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் அதன் ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.

“பாஜகவின் ஆழமான சதியின் விளைவுதான் டெல்லி கலவரங்கள், கலவரங்களை உருவாக்கிக் கொண்டு சென்றது பாஜகதான். நான் இதனை முதல் நாளிலிருந்தே கூறி வருகிறேன், இன்று மீண்டும் வலியுறுத்துகிறேன். நாடாளுமன்றத்திலும் இதைத் தெரிவித்தேன், பாஜகதான் கலவரத்தை ஏற்பாடு செய்தது என்று. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி போலீஸ் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்தனர்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சஞ்சய் சிங்.

வகுப்புவாத கலவரங்கள் தொடர்பாக அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மிக்கும் துணை நிலை ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. கலவரத்தை அடக்காமல் வேடிக்கைப் பார்த்த டெல்லி போலீஸ் பரிந்துரைக்கும் 6 அரசு வழக்கறிஞர்களே கலவரம் தொடர்பான வழக்குகளில் ஆஜராவார்கள் என்று ஆளுநர் பைஜல் கூறுகிறார்.

டெல்லி கலவரத்தில் சுமார் 53 பேர் பலியாக, ரூ.100 கோடிக்கும் மேல் சொத்துக்கள் சேதமடைந்தன.

சஞ்சை சிங் மேலும் கூறும்போது, “சில வழக்குகளில் போலீஸார் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யவில்லை. சில கேஸ்களில் வழக்குகளை பலவீனமாகச் சித்தரிக்கின்றனர். சில வழக்குகளி கூடுதலாக சிலவற்றைச் சேர்க்கின்றனர். சிலவற்றில் உண்மையை மறைக்கின்றனர்.

டெல்லி போலீஸ் பரிந்துரைத்த அரசு வழக்கறிஞர்களை இதில் நியமிக்க ஆளுநர் பரிந்துரைக்கிறார் என்றால் இருண்ட செயல்களையும் இருண்ட முகங்களையும் அடைக்காக்கவே. இதற்காகத்தான் கவர்னரும் முயற்சிக்கிறார்” என்று விமர்சித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in