Published : 21 Jul 2020 09:11 AM
Last Updated : 21 Jul 2020 09:11 AM

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டான்டன் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்

போபால்

மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டான்டன் செவ்வாய்க் கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 85. இவரது மகன் அசுதோஷ் டான்டன் இதனை ட்விட்டரில் அறிவித்தார்.

ஜூன் 11ம் தேதி லக்னோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சிறுநீர் கழித்தல் பிரச்சினை இருந்ததோடு சுவாசப்பிரச்சினைகளும் இருந்தன. இந்நிலையில் இன்று காலை 5.35 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.

மக்கள் தங்கள் இறுதி மரியாதைகளை வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அவரது மகன் அசுதோஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, “திரு டான்டன் அவர்கள் சமூகத்துக்காக செய்த இடையறா உழைப்புக்காக எப்போதும் நினைவில் கொள்ளப்படுவார். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பு ஏராளம். சிறந்த நிர்வாகியாக முத்திரைப் பதித்தவர் மக்கள் நலனில் அக்கறை காட்டுபவர். இவரது மறைவு என்னை வருத்தத்தில் ஆழுத்துகிறது. அரசியல் அமைப்பு விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர் லால்ஜி. அடல் பிஹாரி வாஜ்பேயியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் லால்ஜி” என்று பதிவிட்டுள்ளார்.

லால்ஜி உ.பி. கல்யாண் சிங் அரசில் அமைச்சராக இருந்தவர். பிறகு பாஜக-பகுஜன் கூட்டணி மாயாவதி ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் லால்ஜி பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை லக்னோவில் உள்ள குலாலா காட்-ல் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x