

உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல நாடுகளில் இதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் ஹைதரபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கரோனா தொற்றுக்கு ‘கோவாக்ஸின்’ என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
இதை மனிதர்களிடம் 3 முறை பரிசோதிப்பதற்கு இந்திய ஜெனரல் மருந்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்தது. இதன்படி, ஏற்கெனவே 2 முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. தற்போது 3-வது முறையாக ஹைதாராபாத்தில் உள்ள நிஜாம் அரசு மருத்துவமனையில் 2 கரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தால் விரைவில் இந்த தடுப்பூசி புழக்கத்துக்கு வரும் என கூறப்படுகிறது.