Last Updated : 21 Jul, 2020 08:23 AM

 

Published : 21 Jul 2020 08:23 AM
Last Updated : 21 Jul 2020 08:23 AM

சமூக வலைதளங்களில் இன்று வெளியாகும் இஸ்லாமியத் தூதர் திரைப்படத்துக்கு உ.பி. முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு பற்றிய ஈரானிய திரைப்படம், உலகம் முழுவதிலும் சமூக வலைதளங்களிலும் இன்று வெளியாகிறது. இதற்கு உ.பி. முஸ்லிம்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இஸ்லாமிய இறைத் தூதர்களின் உருவப்படங்களை எந்தவகையிலும் வெளியிடக் கூடாதுஎன்பது முஸ்லிம்களின் மதக் கொள்கையாக உள்ளது. இதனால், நபிகள் நாயகம் மீதான கார்ட்டூன் ஒருமுறை வெளியான போதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் கடந்த 2015-ல் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை ஈரானில் அந்நாட்டு பிரபல இயக்குநர் மஜீத் மஜீதி, திரைப்படமாக எடுத்தார். ‘முகம்மது: தி மெஸேன்சர் ஆப் காட்’ என்ற பெயரிலான இந்தப் படத்துக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ஈரானில் வெளியான இந்தப் படத்துக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் முஸ்லிம்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இயக்குநர் மஜீத் மஜீதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என முப்திகளின் பத்வாவும் வெளியிடப்பட்டது. இதுபோன்ற எதிர்ப்பு காரணமாக அப்போது இத்திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் அத்திரைப்படம் இன்று (ஜூலை 21) உலகம் முழுவதிலும் யூடியூப், வாட்ஸ்அப்,இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியாக உள்ளது. இதற்கு பல்வேறு நாடுகளின் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி., மீரட் நகர காஜியான அப்ஸான் அகமது கூறும்போது, ‘இதுபோல் எந்தவொரு மதக்கொள்கைக்கும் எதிரான திரைப்படங்களை அரசுஅனுமதிக்கக் கூடாது. திரைப்படம் எனும் பெயரில் எங்கள் இறைத்தூதரின் வாழ்க்கையை கேலிக்கூத்தாக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. இதை வெளியிட்டால் உ.பி. முஸ்லிம்களின் போராட்டம் வெடிக்கும்” என்றார்.

இதனிடையே இத்திரைப்படத்தை இந்தியாவில் சமூக வலைதளங்களில் வெளியிடத் தடை கோரி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் கடிதம்எழுதியுள்ளன. மகாராஷ்டிராவிலும் எழுந்த இக்கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு மாநிலஉள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கடிதம் எழுதியுள்ளார்.

இத்திரைப்படத்தை புறக்கணிக்குமாறு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பல்வேறு முஸ்லிம்கள் பதிவுகளை இட்டு வருகின்றனர். உ.பி. மற்றும் டெல்லியின் முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தடையை வலியுறுத்த முயன்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x