

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து முயற்சிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது.
இதனிடையே, ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அதிருப்தி எம்எல்ஏ பன்வார்லால் சர்மா என்பவருடன் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ டேப் ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு போலீஸ் நடவடிக்கை குழுவுக்கு முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆட்சியைக் கவிழ்க்க அதிருப்தி எம்எல்ஏவுடன் பேரம் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய அமைச்சர் ஷெகாவத்துக்கு ராஜஸ்தான் போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் ஷெகாவத் கூறும்போது, "ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. முதலில் அந்தஆடியோ எங்கிருந்து வெளியானது என போலீஸார் விசாரிக்கவேண்டும். அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய வேண்டும்.அரசே தொலைபேசி ஒட்டுக்கேட்டு உரையாடலை பதிவு செய்ததா என்பதையும் போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.