Published : 21 Jul 2020 07:20 AM
Last Updated : 21 Jul 2020 07:20 AM

இயற்கையின் அதிசயத்தில் இதுவரை இப்படி பார்த்ததில்லை: ஒடிசாவில் மஞ்சள் நிறத்தில் ஆமை மீட்பு

ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டத்தில் உள்ளது சுஜான்பூர் கிராமம். இது தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 196 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராம மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிசயமான ஆமை ஒன்றை மீட்டனர். அது முழுக்க முழுக்க மஞ்சள் நிறத்தில் உள்ளது. ஓடு, கால்கள், கழுத்து, முகம் என அனைத்தும் கண்கவரும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. உடனடியாக வனத் துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். அவர்கள் வந்ததும் ஆமையை ஒப்படைத்தனர்.

இந்த மஞ்சள் நிற ஆமையின் எடை சுமார் 30 கிலோ இருக்கும். இதன் அதிகபட்ச வாழ்நாள் 50 ஆண்டுகளாகும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘‘இதற்கு முன்னர் இதுபோன்ற நிறத்தில் ஆமையைப் பார்த்ததே இல்லை. இது மிகமிக அரிதான ஆமை’’ என்று வனவிலங்குகள் மூத்த வார்டன் பானுமித்ரா ஆச்சார்யா, ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா கூறுகையில், ‘‘அநேகமாக இந்த ஆமை தனது இயற்கை நிறத்தை இழந்ததாக (அல்பினோ) இருக்கலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துபகுதியில் உள்ளூர் மக்கள் இதேபோல் இயற்கை நிறத்தை இழந்த ஆமையைப் பார்த்தாக கூறியுள்ளனர்’’ என்று தெரிவித்தார். அத்துடன்,மஞ்சள் நிற ஆமை பெரிய பாத்திரத்தில் உள்ள நீரில் நீந்திக் கொண்டிருக்கும் வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் சுசாந்தா நந்தா வெளியிட்டார். பின்னர் இந்த மஞ்சள் நிற ஆமை அணையில் விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மாதம் ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் தியோலி அணைபகுதியில் அரிய ஆமை ஒன்றை மீனவர்கள் பிடித்தனர். அது கனமான ஓடு இல்லாத மென்மையான ஓடு கொண்ட ஆமை (டிரையோசிடே) வகையைச் சேர்ந்தது என்று கூறுகின்றனர். இதுபோன்ற மென்மையான ஓடுகள் கொண்ட, (சதை போன்றே இருக்கும்) ஆமைகள் ஆப்ரிக்கா, ஆசியா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுபவை என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x