‘130 கோடி மக்களுடன் மோடி இணைந்திருக்கிறார்; உண்மைகளற்ற, சேற்றை வாரி இறைக்கும் குற்றச்சாட்டு’: ராகுல் காந்திக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா : கோப்புப்படம்
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா : கோப்புப்படம்
Updated on
2 min read

பிரதமர் மோடி 130 கோடி மக்களுடன் இணைந்திருக்கிறார். அவர்கள் மனதில் ஆழமாக ஊடுருவி இருக்கிறார். அவர்களுக்காகவே வாழ்கிறார், பணியாற்றுகிறார். உண்மைகளற்ற சேற்றை வாரி இறைக்கும் குற்றச்சாட்டை ராகுல் காந்தி தொடர்ந்து கூறுகிறார் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்தும், சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடு குறித்தும் விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “போலியான, வலிமையான மனிதர் என்ற தோற்றத்தோடு ஆட்சிக்கு வந்தவர் பிரதமர் மோடி. அதுதான் அவருக்குப் பலமாக இருந்தது. இப்போது அதுதான் தேசத்துக்கே மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் 2 நிமிடங்கள் வரை ராகுல் காந்தி பேசி ஒரு வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். இதில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை, எல்லைப் பிரச்சினை, பிரதமர் மோடி குறித்து விமர்சித்துள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''ராகுல் காந்தியின் மற்றொரு தோல்வி அடைந்த திட்டத்தை நாங்கள் இன்று பார்த்தோம். ராகுல் காந்தி வழக்கமான வலுவிழந்த, உண்மைகளற்ற, சேற்றை வாரி இறைக்கும் குற்றச்சாட்டைக் கூறுகிறார். பாதுகாப்புத்துறை, வெளியுறவுக் கொள்கைகளை அரசியலாக்க முயற்சி, ஒரு குடும்பம், தனது கடந்த 1962-ம் ஆண்டு பாவங்களைக் கழுவ முயல்கிறது. அந்தப் பாவங்கள்தான் இந்தியாவை பலவீனப்படுத்தின.

நீண்ட காலமாக ஒரு பரம்பரைதான் பிரதமர் மோடியின் தோற்றத்தைச் சிதைக்க முயன்று வருகிறது. அவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். பிரதமர் மோடி தேசத்தின் 130 கோடி மக்களுடன் தொடர்பில் இருக்கிறார், 130 கோடி மக்களின் ஆழ்மனதில் இருக்கிறார். மக்களுக்காகவே வாழ்கிறார், பணியாற்றுகிறார். பிரதமர் மோடியை யார் அழிக்க நினைக்கிறார்களோ அவர்கள் தங்கள் சொந்தக் கட்சியையே அழிக்கிறார்கள்.

ராகுல் காந்தி இந்திய ராணுவத்தை நம்புவதற்குப் பதிலாக, சீனர்கள் பார்வையிலிருந்தே பேசுகிறார். இந்தியாவை பலவீனப்படுத்தவும், சீனாவைப் பலமாக்கவும் ஏன் ஒரு பரம்பரை விரும்புகிறது. காங்கிரஸில் உள்ள பல தலைவர்கள் அந்த ஒரு பரம்பரையின் நேர்மையற்ற செயலுக்கு அதிருப்தியுடன் இருக்கிறார்கள்.

கடந்த 1950-களில் இருந்து சீனா ராஜாங்கரீதியில் ஒரு பரம்பரைக்கு மட்டும் பல முதலீடுகளைச் செய்கிறது. அதற்கு அவர்களும் சிறந்த கைம்மாறு செய்கிறார்கள். கடந்த 1962-ல் நடந்ததை நினைத்துப்பாருங்கள். ஐநாவில் இடத்தை விட்டுக்கொடுத்தது, அதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிலத்தை சீனாவிடம் இழந்தது, 2008-ல் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நிதி ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள்''.

இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in