'பிரதமர் மோடி வலிமையான மனிதர் எனும் தோற்றம்தான் இப்போது தேசத்துக்கு மிகப்பெரிய பலவீனம்'-ராகுல் காந்தி விமர்சனம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
2 min read

போலியான, வலிமையான மனிதர் என்ற தோற்றத்தோடு ஆட்சிக்கு வந்தவர் பிரதமர் மோடி. அதுதான் அவருக்குப் பலமாக இருந்தது. இப்போது அதுதான் தேசத்துக்கே பலவீனமாக இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஜூன் மாதம் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பின் எல்லையில் இந்தியப் பகுதியை சீனா கைப்பற்றியுள்ளதாக ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஆனால், எல்லையில் இந்தியப் பகுதி ஏதும் ஆக்கிரமிக்கப்படவில்லை என மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில் எல்லைப் பிரச்சினை தொடர்பாக ராகுல் காந்தி 2 நிமிட வீடியோவே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “போலியான, வலிமையான மனிதர் என்ற தோற்றத்தோடு ஆட்சிக்கு வந்தவர் பிரதமர் மோடி. அதுதான் அவருக்குப் பலமாக இருந்தது. இப்போது அதுதான் தேசத்துக்கே மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியிருப்பதாவது:

''சீனர்கள் எந்தவிதமான ராஜதந்திரத் திட்டமிடல் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள். அவர்களின் மனதில், உலகத்தைப் பற்றித் தீர்மானித்து, கணித்து வைத்துள்ளார்கள். இப்போது அதேபோன்று உலகை மாற்ற முயல்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கு அளவும் இருக்கிறது. கவடார் பெல்ட் அண்ட் சாலைத் திட்டம் என்பது, உலகையே மறுகட்டமைக்கும் திட்டமாகும்.

தந்திரத்தின் அடிப்படையில், சீனர்கள் கால்வான், அல்லது டெம்சோக் அல்லது பாங்கோங் ஏரி என எங்கு வேண்டுமானாலும் தங்களின் நிலையை உயர்த்த முயல்வார்கள். எல்லையில் உள்ள நம்முடைய நெடுஞ்சாலையில் தொந்தரவு செய்கிறார்கள், அதை தேவையற்றதாக்க முயல்கிறார்கள். அவர்கள் பெரிய அளவில் சிந்தித்தால் பாகிஸ்தானுடன் சேர்ந்து கைகோத்து காஷ்மீரில் நமக்கு ஏதாவது தொந்தரவு செய்வார்கள்.

இந்தியா-சீனா இடையிலான பதற்றத்தை எல்லைப் பிரச்சினை என்று எளிதாக வரையறுத்துவிட முடியாது. இந்த எல்லைப் பிரச்சினை என்பது, பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டது, அவரின் தோற்றத்தைத் தகர்க்கும் முயற்சியாகும்.

நரேந்திர மோடி ஒரு திறமையான அரசியல்வாதியாக இருக்க வேண்டுமென்றால், அவர் 56 அங்குல மார்பு எனும் சிந்தனையை அதாவது வலிமையானவர் என்பதைப் பாதுகாக்க வேண்டும் என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.

அந்தத் தோற்றத்தை சீர்குலைக்கவே சீனர்கள் எல்லையில் தாக்குகிறார்கள். சீனர்கள் அடிப்படையில் சொல்வதெல்லாம், நாங்கள் சொல்வதை நீங்கள் சொல்லாவிட்டால், நரேந்திர மோடியின் வலுவான தலைவர் எனும் தோற்றக் கருத்தை அழிப்போம் என்கிறார்கள்.

இப்போது கேள்வி என்னவென்றால், பிரதமர் மோடி எவ்வாறு எதிர்வினையாற்றப்போகிறார் என்பதுதான்.

நான்தான் பிரதமர், என்னுடைய தோற்றத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன் என்று பிரதமர் மோடி சொல்வாரா அல்லது அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் வீழ்ந்துவிடுவாரா? என்னுடைய கவலையெல்லாம், பிரமதர் மோடி அழுத்தத்தை, நெருக்கடியைத் தாங்கவில்லையே என்பதுதான்.

இன்று சீனர்கள் நம்முடைய இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சீனர்கள் நம்முடைய இடத்தில் இல்லை என்று பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவிக்கிறார்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், தனது தோற்றத்தைப் பற்றி பிரதமர் மோடி கவலைப்படுகிறார். தன்னைக் கையாள முடியும் என்பதை சீனர்கள் புரிந்துகொள்ள பிரதமர் மோடி அனுமதித்துவிட்டால், அவர் இனி நாட்டிற்காக இனி எப்போதும் பணியாற்ற மாட்டார்''.

இவ்வாறு ராகுல் காந்தி வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in