சச்சின் பைலட் பிடியில் உள்ள எம்எல்ஏக்கள் கதறி அழுகிறார்கள்: கெலாட் குற்றச்சாட்டு

சச்சின் பைலட் பிடியில் உள்ள எம்எல்ஏக்கள் கதறி அழுகிறார்கள்: கெலாட் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சச்சின் பைலட் அடைத்து வைத்துள்ள எம்எல்ஏக்கள் எங்களுக்கு தொலைபேசியில் அழைத்து கதறி அழுகிறார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர்க் கொடி உயர்த்தியுள்ளார். அவரது ஆதரவு எம்எல்ஏ.க்கள் டெல்லி அருகேயுள்ள மானேசரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர்.
கெலாட் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சச்சின் அணி எம்எல்ஏ பன்வார்லால் சர்மா மற்றும் சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியானது.

இதுதொடர்பாக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்ட 3 பேர் மீதும் ராஜஸ் தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் சஞ்சய் ஜெயின் கைது செய்யப்பட்டார்.
பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியாணாவின், மானேசர் நகர ஓட்டலில் தங்கியிருந்த பன்வார்லால் சர்மா எம்எல்ஏ.வை தேடி ராஜஸ்தான் போலீஸார் நேற்று அங்கு சென்ற னர். அங்கு அவர் உட்பட சச்சின் அணி எம்எல்ஏ.க்கள் யாரும் இல்லை. ஓட்டலில் 17 எம்எல்ஏ.க்கள் தங்கியிருந்ததாகவும் ஓட்டலின் ரகசிய வாசல் வழியாக அவர்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சச்சின் லைட் அணி எம்எல்ஏ.க்களை ராஜஸ்தான் போலீஸார் ஓட்டல் ஓட்டலாக தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் எம்எல்ஏக்களை சச்சின் பைலட் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார். அவர் அடைத்து வைத்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்களுக்கு தொலைபேசியில் அழைத்து கதறி அழுகிறார்கள். அவர்களின் தனிப்பட்ட மொபைல் போன்களும் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் சுதந்திரமாக நடமாட அவர் அனுமதிக்க வேண்டும். அந்த எம்எல்ஏக்களில் பலர் எங்களுடன் சேர விரும்புகின்றனர்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in