

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக இந்திராணி உட்பட குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேர் முன்னிலையில், பீட்டர் முகர்ஜியின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்தனர்.
கடந்த 1986-ல் கல்லூரியில் சந்தித்த சித்தார்த் தாஸ் என்பவரை திருமணம் செய்துகொள்ளாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார் இந்திராணி. இவர்களுக்கு ஷீனா, மைக்கேல் ஆகிய 2 பேர் பிறந்தனர். பின்னர் கொல்கத்தாவைச் சேர்ந்த சஞ்சீவ் கண்ணாவை திருணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் வித்தி என்ற மகள் இருக்கிறார்.
இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு முன்னாள் ஸ்டார் இந்தியா தலைமை அதிகாரியாக இருந்த பீட்டர் முகர்ஜியை 2002-ல் திருமணம் செய்துள்ளார் இந்திராணி. ஷீனா, மைக்கேல் ஆகியோர் தன்னுடைய தங்கை, தம்பி என்று பீட்டருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷீனா கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுநர் ஷ்யாம் ராய் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை வரும் 5-ம் தேதி வரை காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக இந்திராணி, சஞ்சீவ் கண்ணா, ஷ்யாம் ராய் ஆகியோர் முன்னிலையில் பீட்டர் முகர்ஜியின் வாக்குமூலத்தை போலீஸார் நேற்று பதிவு செய்தனர். அப்போது அவர்களுடைய வழக்கறிஞர்களும் உடன் இருந்தனர்.
பீட்டர் முகர்ஜி நேற்று காலை 10.30 மணிக்கு கர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீஸார் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டனர். அதேபோல் இந்திராணி உட்பட 3 பேரிடமும் பல்வேறு கேள்விகள் கேட்டு அவர்கள் அளித்த பதிலை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், “ஷீனா போராவை தனது தங்கை என்று இந்திராணி முதலில் அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது வளர்ப்பு மகள் என்று கூறினார். ஆனால், நானும் எனது மகன் ராகுலும் அதை நம்பவில்லை” என்று பீட்டர் முகர்ஜி ஏற்கெனவே கூறியிருந்தார்.
கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தராவிட்டால் பீட்டரிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி விடுவதாகவும் ஷீனாவும், அவரது சகோதரர் மைக்கேலும் இந்திராணியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால், சஞ்சய் கண்ணாவின் உதவியுடன் ஷீனா போராவை இந்திராணி கொலை செய்து உடலை எரித்து புதைத்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
தகவல் கொடுத்தது யார்?
ஷீனா போரா கொலை செய்யப்பட்ட விவரத்தை, மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவுக்கு தொலைபேசியில் தகவல் கூறியவர் யார் என மும்பை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஷீனா போரா கொலை செய்யப்பட்டது 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம். ஆனால் சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இது அம்பலமாகி உள்ளது. அதாவது மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவுக்கு சமீபத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்தான் ஷீனா கொலை செய்யப்பட்ட தகவலை சொல்லி, இது குறித்து மேலும் விசாரிக்கும்படி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் இருந்து அந்த மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், இந்திராணியின் பெயரைக் கூறி, அவரது மகள் ஷீனாவை அவரும், முன்னாள் கணவரும் கொன்று விட்டதாகக் கூறியிருக்கிறார். இந்திராணியிடம் விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதன் பிறகே, ஷீனா கொலை விவகாரம் வெளியே தெரிந்துள்ளது.
இந்த விவரத்தை கூறியவருக்கு கொலை தொடர்பாக மேலும் பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம் என்பதால், அவரையும் இந்த கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்க மும்பை போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதனால் தொலைபேசி எண்ணை வைத்து, அந்த நபரைத் தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சஞ்சீவ் கண்ணாவின் லேப்டாப் பறிமுதல்
ஷீனா போரா கொலை வழக்கில், இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணாவின் லேப் டாப் மற்றும் வங்கி ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஷீனா போரா கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் கண்ணா, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். இங்கு கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றும் போதுதான், இந்திராணியை திருமணம் செய்துள்ளார். ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சீவ் கண்ணா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மும்பை போலீஸார் நேற்று கொல்கத்தா வந்தனர்.
நகரின் தென்பகுதியில் உள்ள சஞ்சீவ் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். அங்கிருந்த லேப் டாப், வங்கி ஆவணங்கள், முதலீட்டு பத்திரங்கள் போன்ற ஏராளமான முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
இதுகுறித்து கொல்கத்தா போலீஸ் உயர் அதிகாரி கூறும்போது, “கொல்கத்தா போலீஸ் உதவியுடன் மும்பை போலீஸார், சஞ்சீவ் வீட்டில் சோதனையிட்டனர்” என்றனர்.
இங்கிலாந்தில் 3 ஆண்டுகள்
மகள் ஷீனா போரா கொலை செய்யப்பட்ட அடுத்த 2 மாதத்தில் உறவினர்கள் கேள்வி கேட்பார்கள் என்ற பயத்தில் இங்கிலாந்து சென்றுள்ளா இந்திராணி. ஏறக்குறைய 3 ஆண்டுகளை அவர் அங்குதான் கழித்துள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ஷீனா கொலை செய்யப்பட்டது தெரிந்துவிட்டால் இங்கிலாந்திலேயே தங்கிவிட இந்திராணி திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கேற்ப கார் டிரைவர் ஷ்யாமை போலீஸார் முன்கூட்டியே கைது செய்திருந்தாலும், இந்திராணி இந்தியா திரும்பும் வரை விஷயத்தை ரகசியமாகவே வைத்திருந்து கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்து செல்வதற்கு முன்பு ஷீனா கொலைக்கு உதவியாக இருந்த டிரைவர் ஷ்யாம் ராயை வேலையில் இருந்து நீக்கிவிட்டார். தான் லண்டன் செல்ல உள்ளதாகவும் இனிமேல் உனக்கு வேலை இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். கொலைக்கு உதவிய அவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததால், கொலையை பற்றி அவர் யாரிடமும் வாயைத் திறக்கவில்லை.
இந்திராணியிடம் 3 பாஸ்போர்ட்கள்
இந்திராணியிடம் இந்திய அரசின் என்ஆர்ஐ பாஸ்போர்ட், இங்கிலாந்து பாஸ்போர்ட், அயர்லாந்து பாஸ்போர்ட் என 3 பாஸ்போர்ட்டுகள் இருந்துள்ளன. இவற்றில் ஒன்றை பயன்படுத்தித்தான் அவர் இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் அவரது பயண விவரங்களை, பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்திடம் இருந்து மும்பை போலீஸார் திரட்டியுள்ளனர்.
அதேபோல், ஷீனாவின் பாஸ்போர்ட் விவரங்களையும் திரட்டியுள்ளனர். இந்திராணி சொன்னதுபோல், ஷீனாவிடமும் 2 பாஸ்போர்ட் இருந்ததா, அவர் அமெரிக்கா சென்றாரா போன்ற விவரங்களையும் விசாரித்து வருகின்றனர்.
கொலைக்கு பயன்படுத்திய வாடகை கார்
ஷீனா, மைக்கேலை கொலை செய்ய திட்டமிட்ட இந்திராணி, அவர்களின் உடல்களை எடுத்துச் சென்று மறைப்பதற்காக ரூ.50 ஆயிரத்துக்கு 4 நாட்களுக்கு ஒரு காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். டிரைவர் ராய்தான் இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஷீனாவை கொல்லவும், அவரது உடலை எடுத்துச் சென்று ராய்கட் வனப் பகுதியில் போட்டு எரிக்கவும் இந்தக் கார்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஷீனாவின் உடலை எடுத்துச் செல்ல ரூ.5 ஆயிரத்துக்கு இரண்டு பெரிய பிளாஸ்டிக் பைகளையும் ராய் வாங்கிக் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணையில், பைகளை விற்றவர் ராயை போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளார்.