Last Updated : 20 Jul, 2020 10:45 AM

 

Published : 20 Jul 2020 10:45 AM
Last Updated : 20 Jul 2020 10:45 AM

மழைக்காலம், குளிர்காலத்தில் கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்க வாய்ப்பு: ஐஐடி-எய்ம்ஸ் ஆய்வில் தகவல் 

கோப்புப்படம்

புதுடெல்லி

மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும், வெயில் அதிகரிக்கும் காலத்தில் கரோனா பரவும் வேகம் கட்டுப்படும் என்று ஐஐடி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் இதுவரையில்லாத வகையில் மிக அதிபட்சமாக 40 ஆயிரத்து 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 11 லட்சத்து 18 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. 27 ஆயிரத்து 497 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கரோனா பரவும் வேகம் கட்டுக்குள் இருந்தநிலையில் ஜூன், ஜூலையில்தான் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில் வரும் மழைக்காலம், குளிர்காலத்தில் கரோனா பரவும் வேகம் நாட்டில் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து புவனேஷ்வரில் உள்ள ஐஐடி உயர் கல்வி நிறுவனமும் எய்ம்ஸ் மருத்துவமனையும் சேர்ந்து ஆய்வு நடத்தியுள்ளன.

ஐஐடியில் உள்ள நிலவியல், கடல்சார், காலநிலை அறிவியல் பிரிவின் பேராசிரியர்கள் வேலு வினோஜ், வி கோபிநாத், லாண்டு ஆகியோரும், எய்ம்ஸ் மருத்துவமனையில் மைக்ரோபயாலஜி துறையின் பேராசிரியர்கள் பிஜயின், பிஜயன்திமாலா ஆகியோர் சேர்ந்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதுகுறித்துக் கூறப்பட்டுள்ளதாவது:

''மனிதகுல வரலாற்றில் இதுவரை எப்போதும் பார்த்திராத பெருந்தொற்று நோயான கரோனா வைரஸை எதிர்கொண்டு நாம் போராடி வருகிறோம். இந்த வைரஸால் உலகம் முழுவதும் ஒருவிதமான அசாதாரண நிலை நிலவுகிறது.

21-ம் நூற்றாண்டில் 2003-ல் பரவிய சார்ஸ் வைரஸ், 2009-ல் பரவிய ஏஹெச்1என்1 இன்ப்ளூயன்ஸா வைரஸ், தற்போது பரவிவரும் கரோனா வைரஸ் போன்றவை காலநிலைக்கு ஏற்பவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பவும் பரவும் வேகத்தில் மாற்றத்தைச் சந்திப்பவையாகும். இது சார்ஸ், இன்ப்ளூயன்ஸா வைரஸில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவிவரும் கரோனா வைரஸ் வெயில் காலத்தில் எவ்வாறு இருந்தது, மழைக்காலம், குளிர்காலம் ஆகியவற்றில் பரவும் வேகம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக ஏப்ரல், ஜூன் மாதங்களில் கரோனாவில் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த வகையில் காலநிலையில் ஏற்படும் மாற்றம் கரோனா வைரஸ் பரவும் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். வெயில் அதிகரித்தால் கரோனா வைரஸ் பரவும் வேகம் குறைய வாய்ப்பு இருக்கிறது.
மழைக்காலத்தில் மழையால் வெப்பம் தணிந்து குளுமையான காலநிலை நிலவும். இந்தக் காலகட்டம் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு சாதகமான சூழலாகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெயிலில் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்தால்தால் கூட 0.99 சதவீதம் கரோனா பரவும் வேகம் குறையும், இரட்டிப்பு ஆவது 1.13 நாள் அதிகரித்து, கரோனா பாதிப்பைக் குறைக்கிறது.

அதேசமயம், மழைக்காலம், மற்றும் குளிர்காலத்தில் கரோனா வைரஸ் பரவும் வேகம் வெயில் காலத்தில் இருந்ததைவிட வேகமாக இருக்கும். ஆனால், அதன் பரவல் வேகத்தின் அளவு வரும் காலங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் தெரியவரும்''.

இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் வேலு வினோஜ் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், “ஒவ்வொரு காலகட்டத்திலும் கரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றி காலநிலையோடு தொடர்புபடுத்தி ஆய்வு செய்தோம். அதில் வெப்பம் அதிகரித்தால், கரோனா பரவும் வேகம் குறைகிறது என்பது எங்களின் கண்டுபிடிப்பாகும்.

ஆனால், காற்றில் ஈரப்பதம் மற்றும் குளிர்காலத்தில் கரோனா பரவும் வேகம் குறித்து இன்னும் அந்தக் காலகட்டத்தில் ஆய்வு செய்யவில்லை என்றாலும் உலக அளவில் கிடைத்த புள்ளிவிவரங்களில் அந்தக் காலகட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரிக்கிறது. நம் நாட்டில் அந்தக் காலத்தில் இன்னும் ஆய்வுகள் அவசியம்.

வெப்பம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வெயில் காலத்தில் கரோனா வேகம் குறைந்துள்ளது, இரட்டிப்பு நாட்களும் அதிகரித்துள்ளது. பொதுவாக கோடைகாலத்துக்கும், குளிர், மழைக்காலத்திலும் வெப்பநிலை வேறுபாடு என்பது 7 டிகிரி இருக்கும். வெப்பநிலை குறையும் போது கரோனா பரவல் வேகம் அதிகமாக இருக்கலாம் என்பது கணிப்பாகும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x