

குஜராத் படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டு போராட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் கேரளாவில் வசிக்கும் தமிழ் பிராமணர் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோருகின்றனர்.
வரும் அக்டோபர் 3, 4 தேதிகளில் முதல் கேரள மாநிலம் பாலக்காட்டில் இரண்டு நாள் மாநாட்டுக்கு கேரள பிராமண சபா ஏற்பாடு செய்துள்ளது. அந்த மாநாட்டின்போது மாநிலத்தில் தமிழ் பிராமண சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு பெறுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், குஜராத்தில் படேல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஹர்திக் படேலிடம் கேரள பிராமண சபா தலைவர்கள் ஆலோசனை கேட்டு வருகின்றனர்.
இது குறித்து கேரள பிராமணர் சபா துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கரிம்புழா ராமன் கூறும்போது, "ஹர்திக் படேலிடம் எங்களது இடஒதுக்கீடு போராட்டம் குறித்து ஆலோசித்துள்ளோம். நவம்பர் மாதம் நடைபெறும் எங்கள் சபா கூட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதியளித்திருக்கிறார்" என்றார்.
'பிற சமூகத்துக்கு எதிரானவர்கள் அல்ல'
தங்களது கோரிக்கை குறித்து ராமன் மேலும் விவரிக்கும் போது, "பிற சமூகத்தினர் பெறும் இடஒதுக்கீட்டுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. எங்களுக்கு உரித்தானதை மட்டுமே நாங்கள் கேட்கிறோம். எங்கள் சமூகத்தினர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில் எங்கள் சமூகத்தினருக்கும் மாநில அரசு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஒரு சிலருக்கு மட்டும் காலகாலமாக இடஒதுக்கீடு சலுகையை நீட்டித்து அளித்துவிட்டு மற்றவர்களுக்கு அதை முற்றிலுமாக மறுப்பது என்பது கவலையளிக்கும் போக்கு. அரசியல் ஆதாயங்களுக்காகவே இடஒதுக்கீடு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் வாதத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
மேலும், அவர் கூறியதுபோல், அரசியல் தலையீடு இல்லாத நடுநிலையான குழு ஒன்றை அமைத்து இடஒதுக்கீடு முறையை பரிசீலிக்க வேண்டும் என்ற அவரது பரிசீலனையை வலியுறுத்துகிறோம்" என்றார்.