சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினை குறித்து விமானப்படை கமாண்டர்கள் 22-ல் ஆலோசனை

சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினை குறித்து விமானப்படை கமாண்டர்கள் 22-ல் ஆலோசனை
Updated on
1 min read

லடாக் எல்லையில் சீனாவுடன் நடந்து வரும் பிரச்சினை தொடர்பாக, வரும் 22-ம் தேதி இந்தியவிமானப் படையின் தலைமை கமாண்டர்கள் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இமயமலையின் லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் கடந்த மே மாதத் தொடக்கத்தில் அத்துமீறி நுழைய முயன்றது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய – சீனராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்களும், சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து,லடாக் எல்லையில் இரு நாடுகளும் தங்கள் ராணுவப் படைகளை குவித்ததால் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இந்த பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாடுகள் இடையே ராஜாங்க ரீதியிலும், ராணுவ நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக, லடாக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது.

இருந்தபோதிலும், பிங்கர் 4, டெங்சாங் சமவெளி உள்ளிட்ட சில பகுதிகளில் அந்நாடு தனதுராணுவத் துருப்புகளை நிறுத்தியுள்ளது. இந்த இடங்களில் இருந்தும் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, சமீபத்தில் லடாக்குக்கு சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சீனாவுடன் மோதல் போக்கு நடைபெறும் சூழலில், அமைச்சர் அங்கு சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய விமானப் படையின் தலைமை கமாண்டர்கள் வரும் 22-ம் தேதி முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு விமானப் படை தளபதி ஆர்கேஎஸ் பதவுரியா தலைமை வகிக்கிறார்.

கிழக்கு மற்றும் வடக்கு லடாக் எல்லைகளில் விமானப் படை சார்பில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் போர் விமானங்களின் தயார்நிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துஇதில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ள அதிநவீன ரபேல் ரக போர் விமானங்களை லடாக்குக்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in