Last Updated : 19 Jul, 2020 05:16 PM

 

Published : 19 Jul 2020 05:16 PM
Last Updated : 19 Jul 2020 05:16 PM

கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் 7 இந்திய நிறுவனங்கள்: உலகளவில் எத்தனை? எப்போது முடியும்?: ஓர் அலசல்

கோப்புப்படம்

கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் 7 இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதில் இரு நிறுவனங்கள் மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனைக் கட்டத்துக்குச் சென்றுள்ளன.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்து 77 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் விரைவாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் கட்டாயத்தில் உலக நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்திய அளவில் பாரத் பயோடெக், செரம் இன்ஸ்டிடியூட், ஜைடஸ் கெடிலா, பனேசியா பயோடெக், இந்தியன் இம்முனோலாஜிக்கல்ஸ், மைன்வாக்ஸ் மற்றும் பயோலாஜிக்கல்-இ ஆகிய 7 நிறுவனங்கள் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

பொதுவாக தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சி ஆண்டுக்கணக்கில் கூட நீடிக்கும், மருந்து கண்டுபிடிக்கப்பட்டபின் அதேதயாரிக்கும் அளவு என காலஅளவு அதிகரிக்கும். ஆனால், கரோனா வரைஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சில மாதங்களிலேயே தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இரவுபகலாக அறிவியல் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

எத்தனை கட்டங்கள்

தடுப்புமருந்து பரிசோதனை என்பது மொத்தம் 4 கட்டங்களைக் கொண்டது. இதில் ப்ரிகிளினிக்கல் பரிசோதனை விலங்குகள், பூனை, எலி, முயல் ஆகியவை மீது செலுத்தி பரிசோதிக்கப்படும்.

முதல் கட்டம் என்பது குறைந்த அளவில் உள்ள மக்களிடம் செலுத்தி மருந்தின் பாதுகாப்புத்திறன் பற்றியும், அதன் நோய் எதிர்ப்பு சக்தி பற்றியும் பரிசோதிக்கப்படும்.

2-வது கட்டப்பரிசோதனை என்பது பாதுகாப்பு பரிசோதனையை பெரிதாகச் செய்தலாகும்.

3-வது கட்டம் என்பது ஆயிரக்கணக்கான மக்களுக்கு பல்வேறு வாழிடங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பு மருந்தைச் செலுத்தி மருந்தின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றை பரிசோதிக்கும் முறையாகும்.

இதில் ஹைதராாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் “கோவாக்ஸின்” எனும் மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் கிளினிக்கல் பரிசோதனைக்கும் அனுமதி வழங்கப்பட்டு அது நடந்து வருகிறது.

ஜைடஸ் கெடிலா நிறுவனம் தனது கரோனா தடுப்பு மருந்தான "ஜைகோவி-டி " மருந்தை மனிதர்கள் மீதுசெலுத்தி பரிசோதிக்கும் கிளினிக்கல் பரிசோதனையை தொடங்கிவிட்டது. இந்தப் பரிசோதனை அடுத்த 7 மாதங்களில் முடியும் எனத் தெரிவித்துள்ளது.

ஆகவே, இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஜைடஸ் கெடிலா, பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில்தான் மருந்து பயன்பாட்டுக்கு வரும்.

பனேசியா பயோடெக் நிறுவனம் அயர்லாந்து மற்றும் அமெரிக்காவின் ரெஃபானா நிறுவனத்துடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் மருந்து சந்தைக்கு விற்பனைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது.

தேசிய பால்வளம் மேம்பாட்டு வாரியத்தின் துணை நிறுவனமான இந்தியன் இம்முனாலாஜிஸ் நிறுவனம், ஆஸ்திரேலியாவின் கிரிப்பித் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மைன்வாக்ஸ், பயோலாஜிக்கல் இ ஆகிய நிறுவனங்களும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலகளவில் எத்தனை?

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் படி, உலகளவில் 140 நிறுவனங்கள் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதில் 24 நிறுவனங்கள் மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனையில் பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன.

சீன நிறுவனமான சினோவாக் பயோடெக் நிறுவனம் 3-வது கட்டத்தில் பிரேசில் நாட்டில் நடத்தி வருகிறது.

அதேபோல ஆக்ஸ்போர்ட் நிறுவனம் பிரிட்டனிலும், தென்னாப்பிரி்க்கா, பிரேசிலிலும் மூன்றாவது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை நடத்தி வருகின்றன.

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் இந்த மாதத்தில் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனைக்குள் நுழைகிறது.

உலகளவில் பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வரைஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரி்க்காவின் கெய்ஸர் நிறுவனமும், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு நிறுவனமும்தான் முன்னணியில் இருந்து வருகின்றன. இரு நிறுவனங்களும் மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையில் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளன.இந்த இரு நிறுவனங்கள்தான் முதன்முதலில் இந்த ஆண்டு இறுதிக்குள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தை சந்தையில் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே முன்னணி நிறுவனமான செரம் இன்ஸ்டிடியூட் மருந்து நிறுவனமும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கிறது.

அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவாலா கூறுகையில் “ தற்போதுள்ள கரோனாவுக்கு எதிரானதடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆஸ்ட்ராஜெனிசியா ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்துடன் இணைந்து பணியாற்றி கிளிக்கல் பரிசோதனையில் 3-வது கட்டத்தில் இருக்கிறோம்.

இந்தியாவி்ல் மனிதர்களுக்கான பரிசோதனை ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளோம். இப்போதுள்ள சூழல், முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் நிச்சயம் மருந்து பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம்.
ஆக்ஸ்போர்ட் நிறுவனத்துன் நாங்கள் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி மருந்து கண்டுபிடிக்கப்பட்டபின் இந்தியாவுக்கும், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் இருக்கும் வளரும் நாடுகளுக்கும் வழங்குவோம்” எனத் தெரிவித்தார்.

பிடிஐ தகவல்களுடன்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x