

ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கச் செய்யப்படும் சதியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது பதவியை ராஜினமாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான் வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக்கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநிலத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநிலசட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.
இதற்கிடையே பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வாரி லால் சர்மா, சஞ்சய் ஜெயின் ஆகியோர் அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்கக் பேரம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ டேப்பை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி அவர்களைக் கைது வேண்டும் என வலியுறுத்தியது.
இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் கொறடா ஜோஷி, மாநில ஊழல் ஒழிப்பு போலீஸாரிடம் ஆடியோ டேப்பில் பேசப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் ராஜஸ்தான் போலீஸார் இரு வழக்குகள் பதிவு செய்து சஞ்சய் ஜெயின் என்பவரை மட்டும் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் பெரிதாகியுள்ளதையடுத்து, ராஜஸ்தான் தலைமைச் செயலாளரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய் மக்கான் ஜெய்ப்பூரில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
“ ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆட்சியை கவிழ்க்க மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் சதி நடந்துள்ளது.
மத்திய அமைச்சர் ஷெகாவத், காங்கிரஸ் எம்எஎல்ஏ பன்வாரிலால் சர்மா, சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ டேப் தொடர்பாக ராஜஸ்தான் ஊழல் தடுப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்த ஆடியோ டேப்பில் உள்ளது தன்னுடைய குரல் இல்லையென்றால், ஏன் குரல் சோதனைக்குச் செல்ல மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தயங்குகிறார், அச்சப்படுகிறார்.
ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டதால், இனிமேல் மத்திய அமைச்சர் பதவியை வகிக்க கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை, அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விசாரணையில் எந்தவிதமான தலையீடும் இல்லை.
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுக்குத தேவையான பாதுகாப்பை ஹரியனா, டெல்லி மாநில போலீஸார் வழங்கி வருகின்றனர். இந்த விசாரணையை தடுத்து நிறுத்த வேண்டும் எனும் நோக்கில் மத்திய அரசு சிபிஐ பெயரைக் கூறி மிரட்டி வருகிறது
இவ்வாறு அஜய் மக்கான் தெரிவித்தார்