

செவ்வாய்க்கிழமையன்று போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி தலைமறைவான படேல்கள் போராட்டத் தலைவர் ஹர்திக் படேல், குஜராத் சுரேந்திரா நகர் மாவட்டத்தில் தாரங்காத்ரா என்ற ஊரில் நெடுஞ்சாலை அருகே காணப்பட்டார். அவர் தான் கடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இன்று நண்பகல் படேல் தான் தாரங்காத்ரா அருகே நெடுஞ்சாலையில் இருப்பதாக தகவல் அனுப்பினார். அப்போது தன்னை ஆயுதமேந்திய சிலர் கடத்திச் சென்றதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் ஹர்திக் கூறும்போது, “ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள பயாத் என்ற இடத்தில் என்னுடைய காரை சில நபர்கள் துரத்தினர். பிறகு அவர்கள் என்னைக் கடத்தி ஒரு காரில் ஒரு நாள் இரவு முழுதும் வைத்திருந்தனர்.
இடஒதுக்கீடு போராட்டத்தை கைவிட வேண்டும் இல்லையேல் அழித்து விடுவோம் என்றும் என்னை மிரட்டினர். என்னை மிரட்டிய அந்த நபர் இதுவே முதலும் கடைசியுமான எச்சரிக்கை என்றார். இனி ஒருமுறை கிராமத்தில் பொதுக்கூட்டத்தில் மக்களிடையே பேசுவதைப் பார்த்தால் என்னை அழித்து விடுவதாக மிரட்டினர்.
ஒரு இரவு முழுதும் என்னை மிரட்டிய பிறகு பயாத்திலிருந்து தாரங்தாரா தாலுக்காவில் கிராமம் ஒன்றில் என்னை விட்டுச் சென்றனர். அவர் யார் என்று தெரியவில்லை, போலீசா அல்லது வேறு நபரா என்று தெரியவில்லை, ஆனால் அவரிடம் துப்பாக்கி இருந்தது.
அவர் யார் என்பது எனக்கு தெரியவேண்டும், யாருடைய அறிவுறுத்தலின் பேரில் அவர் என்னை ஒருநாள் இரவு முழுதும் பிடித்து வைத்திருந்தார் என்பதும் எனக்கு தெரிய வேண்டும்” என்று கூறினார் ஹர்திக் படேல்.
இதற்கிடையே காந்திநகர் ஐ.ஜி. ஹஸ்முக் படேல் கூறும்போது, ஹர்திக் படேலின் தற்போதைய சரியான இருப்பிடம் இன்னமும் தெரியவில்லை என்றும் அவரைக் கண்டுபிடித்தால் உடனே கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் தெரிவித்தார்.
அவரது வழக்கறிஞர் கூறுவது போல் அவர் ஏதாவது பிரச்சினையில் இருந்தால் போலீஸ் அவருக்கு நிச்சயம் உதவும் என்றார்.
இதனிடையே, படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராடி வரும் ஹர்திக் படேலுக்கு நெருக்கமானவர்களை குஜராத் போலீஸ் கைது செய்து வருகிறது. ஹர்திக் படேலின் முக்கிய கூட்டாளி என்று கருதப்படும் நிலேஷ் படேலை சவுராஷ்டிராவில் உள்ள மோர்பியில் கைது செய்தனர். | முழு விவரம்:>ஹர்திக் படேலுக்கு அழுத்தம் அதிகரிப்பு: பிரிவினையைத் தூண்டியதாக முக்கியக் கூட்டாளி கைது