

இந்தியாவில் கரோனா வைரஸால் சமூகப் பரவல் தொடங்கிவிட்டது, அதனால்தான் நிலைமை மோசமாகச் செல்கிறது, நாள்தோறும் புதிய தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று இந்திய மருத்து அமைப்பு(ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் புதிதாக 38 ஆயிரத்து 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 10 லட்சத்து 77 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய மருத்துவ அமைப்பின் தலைவர் மருத்துவர் வி.கே. மோங்கா ஏஏன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் மிகஅதிகமாக அதிகமான அளவில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து தற்போது நாள்தோறும் 30 ஆயிரத்துக்கம் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கரோனா வைரஸால் சமூகப் பரவல் தொடங்கிவிட்டது, அதனால்தான் நிலைமை மோசமாகச் செல்கிறது. தேசத்துக்கு இது உண்மையிலேயே மோசமான சூழலாகும்.
இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் தொடர்புடையதாக இருக்கின்றன. இப்போது கரோனா வைரஸ் சிறு நகரங்களுக்குள்ளும், கிராமப்புறங்களுக்கும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இப்படியே சென்றால் கரோனாவைக் கட்டுப்படுத்துவது கடினமானதாக மாறிவிடும்.
டெல்லியில் நம்மால் கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, கோவா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் உள்மாவட்டங்கள், கிராமங்களில் உங்களால் கட்டுப்படுத்த முடிந்ததா. இப்போது பல நகரங்கள் புதிதாக ஹாட்ஸ்பாட் பகுதிகளாக மாறி வருகின்றன.
மாநில அரசுகள் முழு விழிப்புடன் இருந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் மத்தியஅரசிடம் இருந்து உதவிகளைப் பெற வேண்டும்.
கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த இரு வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன. முதலாவது, 70 சதவீத மக்களை நோய் தொற்றுக்கு ஆளாக்கி, இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டுவருவது, இரண்டாவது தடுப்பூசி போடுவதாகும்.
இவ்வாறு மோங்கா தெரிவித்தார்