Last Updated : 19 Jul, 2020 08:42 AM

 

Published : 19 Jul 2020 08:42 AM
Last Updated : 19 Jul 2020 08:42 AM

தங்கம் கடத்தல் வழக்கு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் நற்பெயரைக் கெடுக்க திட்டமிட்டு பிரச்சாரம் நடக்கிறது: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்

திருவனந்தபுரம்


ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையான இடது ஜனநாயக முன்னணி அரசின் நற்பெயரைக் கெடுக்க திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சரித் குமார் அளித்த தகவலின்படி, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகாகவும் இருந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.

இந்த விவகாரம் வெளியானது தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கர் பதவியிலிருந்து நீக்கி அவரை சஸ்பெண்ட் செய்து கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக என்ஐஏ அமைப்பினர் நேற்று திருவனந்தபுரத்தின் பல்வேறு இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றில் தேடுதல் நடத்தினர்.

இந்தச் சூழலில் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தில் பாதுகாவலராக இருந்த ஜெய் கோஷ் என்பவர் திடீரென காணாமல் போனார். அவரை போலீஸார் தேடியபோது, தும்பா பகுதி அருகே தன் குடும்பத்தாரின் பூர்வீக வீட்டில் தற்கொலை செய்து கொள்ளும முயற்சியில் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு கிடந்தார். அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனயில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அவரிடம் நேற்று திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். தங்கம் கடத்தல் விவகாரத்தில் ஜெய் கோஷ்க்கு ஏதேனும் மிரட்டல் வந்திருக்கும் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

நாளுக்கு நாளுக்கு திருப்பங்களுடன் நகர்ந்து வரும் தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக குற்றம்சாட்டி வருகின்றன.

முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்து, விசாரணையை சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் நேற்று இரவு நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ தங்கம் கடத்தல் வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. நிச்சயம் உண்மைக் குற்றவாளிகள் வெளியே வருவார்கள்.

விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் தங்கம் கண்டுபிடித்த செய்தி வந்தவுடன், ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவர் , இந்த குற்றச்சாட்டை அரசின் மீது சுமத்த திட்டமிட்டுள்ளார். அதனால்தான் முதல்வர் அலுவலகம் சுங்கத்துறை அலுவலர்களுக்கு நெருக்கடி தர முயற்சித்தது என்று கூறி வருகிறார்.

எவ்வாறாகினும், என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசின் நற்பெயரைக் கெடுக்கும் திட்டமிட்ட பிரச்சாரம்தான்.

விசாரணை தொடர்ந்து வருகிறது, இதில் எந்த சூழலிலும் எந்த அதிகாரியையும், யாரையும் பாதுகாக்க மாநில அரசு முயற்சிக்காது. இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை கேரள மக்கள் பார்த்து வருகிறார்கள்.

மாநில அரசு மீது பல்வேறுவிதமான ஊக குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறார்கள். அந்த பொய்கள் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. இந்த பிரச்சாரச்சில் சில ஊடகங்கள்கூட இணைந்துள்ளன. உண்மை விரைவில் வெளிவரும்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x